பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்
By DIN | Published On : 20th May 2019 07:18 AM | Last Updated : 20th May 2019 07:18 AM | அ+அ அ- |

பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நான்குவழிச் சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை களையும் வகையில் மே 29-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்தும் பிரிவு) ராமசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியது: மதுரையிலிருந்து பரமக்குடி வரை 76 கி.மீ., தொலைவுக்கு நான்குவழிச் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பரமக்குடியிலிருந்து தனுஷ்கோடி வரை நான்குவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரை 39 கி.மீ., தொலைவுக்கு இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் ரூ. 937 கோடி செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரமக்குடியிலிருந்து தனுஷ்கோடி வரை 113 கி.மீ., தொலைவு நான்குவழிச் சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் முதல்கட்டமாக பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரை 17 கிராமங்களில் 12 லட்சத்து 47 ஆயிரத்து 385 சதுர கி.மீ., தூரம் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இச்சாலையின் இருபுறமும் மொத்தம் 60 மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு நிலம் அளிப்பவர்களின் வசதிக்காக பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது.
நில உரிமையாளர்கள் தங்களுடைய சொத்தின் மூலப்பத்திரம், தற்போதைய பத்திரம், வில்லங்கச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றை நிலம் கையகப்படுத்தும் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் சான்றுகள் முழுவதும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, உண்மை என உறுதிசெய்யப்பட்ட பின், நிலங்களின் மதிப்பு கணக்கிடப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் அதற்கான பணம் செலுத்தப்படும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 29 ஆம் தேதி வரை நடைபெறும் விசாரணை முகாமில் தெரிவித்து பயன் பெறலாம் என்றார்.