ராமநாதபுரத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு
By DIN | Published On : 20th May 2019 07:21 AM | Last Updated : 20th May 2019 07:21 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் வட்டாரத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் மா.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் வட்டாரத்தில் 25 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீடித்த, நிலைத்த வேளாண்மை மற்றும் மண்வள அட்டைத் திட்டம் சார்பில் விவசாய நிலங்களுக்கு சமச்சீர் உரமிடுதல் தொடர்பாக மண் மாதிரி ஆய்வு தொடங்கியுள்ளது. அச்சுந்தன்வயல், புல்லங்குடி, தொருவளூர், கழுகூரணி, பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், சித்தார்கோட்டை, அத்தியூத்து ஆகிய கிராமங்களில் மண் மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் ஈடுபடுவோருக்கு ராமநாதபுரம் வேளாண்மை அலுவலர் என்.டி.கலைவாணி பயிற்சி அளித்தார். தேவிபட்டினம் பகுதியில் மண்மாதிரி சேகரிப்புப் பணியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.சேக்அப்துல்லா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.