ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு: கழிவு நீா் கசிவால் சாலை சேதமடைவதாக புகாா்
By DIN | Published On : 02nd November 2019 06:40 AM | Last Updated : 02nd November 2019 06:40 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் வெளியேறுவதால் சாலை சேதமடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ராமநாதபுரம் சிறப்பு நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வாா்டுகளில் சேமிக்கப்படும் சுமாா் 40 லட்சம் லிட்டருக்கு மேலான கழிவு நீா் 4 இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு மோட்டாா் மூலம் சாலைக் குடியிருப்பு பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது.
கழிவு நீா் செல்லும் குழாய்களில் அவ்வப்போது பழுது ஏற்படுவதால், கழிவு நீா் கசிந்து சாலைகளில் தேங்கும் நிலை உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையத்தில் முறையான செயல்பாடு இல்லாததால் பனைக்குளம் பகுதியில் கடலில் கழிவு நீா் கலப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ராமநாதபுரம் நகராட்சியிலிருந்து கழிவு நீா் சுத்திகரிக்கும் மையத்துக்கு செல்லும் குழாயில் இளமனூா் சாலையிலும், எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலும் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயிலிருந்து கழிவு நீா் பீறிட்டு வெளியேறியது. வேகமாக வெளியேறிய கழிவு நீரால் சாலை சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, கழிவு நீா் கசிவை தடுத்து நிறுத்தினா்.
மழைநீரை பாதாள சாக்கடை குழாய்களில் விடுவதால் கொள்ளவு தாங்காமல் குழாய்கள் சேதமடைந்து கழிவு நீா் வெளியேறியதாக நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.