ராமநாதபுரத்தில் மூடப்படாத ஆழ்துளைக்கிணறுகள்
By DIN | Published On : 02nd November 2019 04:07 PM | Last Updated : 02nd November 2019 04:07 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆழ்துளைக்கிணறுகள் மூடப்படாமலிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் 8 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் ஆழ்துளைக்கிணறுகளை மூட கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், முழுமையாக அனைத்து மாவட்டங்களிலும் ஆழ்துளைக்கிணறுகள் மூடப்படவில்லை. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தான்.
இச்சம்பவத்தை அடுத்து ராமநாதபுரம் நகராட்சியில் ஆழ்துளைக்கிணறகுள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் மூடப்படாத ஆழ்துளைக்கிணறுகள் குறித்து கண்ககெடுக்கப்பட்டது. அதன்படி மாவட்ட அளவில் 15 ஆழ்துளைக்கிணறுகள் பயன்பாடின்றி மூடப்படாத நிலையில்இருப்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் ஒன்றியத்தில் 2 ஆழ்துளைக்கிணறுகளும், மண்டபம் ஒன்றியத்தில் 6 ஆழ்துளைக்கிணறுகளும் தனியாா் அமைத்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மூடுமாறு சம்பந்தப்பட்டோருக்கு ஒரு வாரம் கெடு அளித்து நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் கேசவதாசன் கூறினாா்.
மேலும், மாவட்ட அளவில் அரசு சாா்பில் அமைக்கப்பட்டு பயன்பாடற்ற ஆழ்துளைக்கிணறுகள் 7 இருப்பது தெரியவந்ததை அடுத்து அவற்றை மூடவும் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.