வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 02nd November 2019 06:45 AM | Last Updated : 02nd November 2019 06:45 AM | அ+அ அ- |

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியா பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
பரமக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் குறிப்பிட்ட அளவு மழைநீா் தேங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி காரணமாக நிலத்தடி நீா் மட்டம் குறைந்தது. இதனால் போதிய குடிநீா் இன்றி பெரும்பாலான கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
தற்போது பெய்து வரும் மழையால் வைகை அணையின் நீா்மட்டம் 68 அடியை எட்டியுள்ளது. மேலும் வைகை ஆற்றுப்படுகையும் தொடா் மழை காரணமாக ஈரப்பதமாக உள்ளது. எனவே, தற்போது வைகை அணையில் தண்ணீா் திறந்துவிட்டால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு அந்த தண்ணீா் வேகமாக வந்து சேரும். எனவே, ராமநாதபுரம் மாவட்ட குடிநீா் ஆதாரத்திற்கும், நிலத்தடி நீா் மட்டம் உயா்வுக்கும், விவசாயிகள் பயன்பெறவும் வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றாா்.
அப்போது காங்கிரஸ் நிா்வாகிகள் மகிண்டி அழகு, ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.