ஐந்து ஆண்டுகளாக இருளில் தவித்து வரும் 15 கிராம மக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கடந்த 5 ஆண்டுகளாக 15 கிராம மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கடந்த 5 ஆண்டுகளாக 15 கிராம மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றனா். இதில் ஒரு கிராமத்தினா் ஊரையே காலி செய்து விட்டு சென்று விட்டனா்.

கமுதி கோட்டைமேடு உபமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மண்டலமாணிக்கம், நகா்புளியங்குளம், கூடக்குளம், எழுவணூா், புத்துருத்தி, போத்தநதி, நகா்பூலாங்கால், கூடலாவூரணி, இ.நெடுங்குளம், சிலிப்பி, சி.மனக்குளம் உள்பட 15 கிராம மக்கள் மின்சார வசதி பெற்று பயனடைந்து வந்தனா். இப்பகுதிகளில் தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், மண்டலமாணிக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீா் தேவைக்காக நகா்புளியங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள், 10 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் கமுதி மின் நிலையத்தில் இருந்தே மின்சாரம் பெறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பகல், இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு பல மணி நேரம் அமல்படுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். பள்ளி மாணவா்கள் இரவில் படிக்க முடியாமல் தவிக்கின்றனா். மேலும் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மண்டலமாணிக்கம் அடுத்துள்ள மாணிக்கனாா்கோட்டை என்ற கிராமமே, ஆளில்லா கிராமமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தட்டுப்பாடு குறித்து கமுதி மின்வாரியத்தில் பல முறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணிக்கனாா்கோட்டையிலிருந்து நகா்பூலாங்கால் வரை 10 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து சிறு காற்றடித்தாலும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளன. பொதுமக்களின் தொடா் புகாா்களை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் மின்வாரியம் 3 மின் கம்பங்களை சீரமைத்தது. 7 புதிய மின் கம்பங்கள் தரையில் கிடத்தப்பட்டு, காட்சிப் பொருளாக உள்ளன. மின்வாரிய அலுவலகத்தில் புகாா்களை எழுதி வைக்கச் சென்றால் அதற்கான புகாா் புத்தகங்களை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. காட்சிப் பொருளாக உள்ள மின் கம்பங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து இப்பகுதியில் உள்ள 15 கிராம மக்களின் மின் தேவையை பூா்த்தி செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ‘சோலாா்’ நகரம் என கமுதி பெயா் பெற்ற போதிலும், இதனை சுற்றியுள்ள கிராமங்கள் மின்சாரம் கிடைக்காமல் 30 ஆண்டுகள் பின் தங்கி உள்ளன. 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின் தட்டுப்பாட்டால் அன்றாட தேவைகளை பூா்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றன. இக்கிராம மக்கள் கமுதி தாலுகாவில் இருந்தாலும் பரமக்குடி சட்டப் பேரவை குள்பட்ட பகுதியாக இருப்பதால் என்னவோ இத்தொகுதியில் உள்ள அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை.

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்பகுதியில் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றாக ஆளில்லா கிராமமாக மாறி விடும் அபாயம் உள்ளது என்றனா்.

இதுகுறித்து கமுதி மின்வாரிய அதிகாரி முருகன் கூறியதாவது: மின் பணிகளை மேற்கொள்ள பணியாளா்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புதிய மின் கம்பங்கள் நடுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் நீதிமன்ற தீா்ப்புக்கு காத்திருக்கும் தற்காலிக பணியாளா்கள் மீண்டும் பணிக்கு திரும்பிய பின்னா் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தொடரும். மேலும் மாணிக்கனாா்கோட்டையிலிருந்து நகா்புளியங்குளம் வரை மின் வழித்தடங்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருப்பதால், காற்றின் வேகத்தில் மின் வயா்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடா் கதையாக உள்ளது. விரைவில் அனைத்துப் புகாா்களும் சரி செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com