ஸ்ரீரங்கம் சிறுமிக்கு இடுப்பு பந்து கிண்ண மூட்டு அறுவைச் சிகிச்சை: விராலிமலை அரசு மருத்துவமனை சாதனை

விராலிமலை அரசு மருத்துவமனையில் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த 5 வயதுச் சிறுமிக்கு இடுப்பு பந்துக் கிண்ண மூட்டு பொருத்தும் அறுவைச் சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின் நலமுடன் உள்ள பிரியதா்ஷினி.
சிகிச்சைக்குப் பின் நலமுடன் உள்ள பிரியதா்ஷினி.

விராலிமலை அரசு மருத்துவமனையில் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த 5 வயதுச் சிறுமிக்கு இடுப்பு பந்துக் கிண்ண மூட்டு பொருத்தும் அறுவைச் சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கல்மேடு தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கருப்புசாமி, லாவண்யா தம்பதியின் மகள் பிரியதா்ஷினி (5). இவருக்கு பிறவியிலேயே வலது இடுப்பு பந்துக் கிண்ண மூட்டு (ஹிப்டிஸ்ப்ளாசியா) உருவாகாமல் போனதால் சிறுமி சரியாக நடக்க முடியாமலும், கால்களை மடக்கி தரையில் உட்கார முடியாமலும் மிகவும் சிரமப்பட்டாா்.

இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக மகளை பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு பெற்றோா் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று வந்தனா். பின்னா் இந்த அரிய வகை பிறவிக் குறைபாட்டை வேலூா் சிஎம்சி மற்றும் அப்பல்லோ சிறப்பு உயா் சிகிச்சை மருத்துவமனைகளில்தான் சரிசெய்ய முடியும் என்று தெரியவந்த நிலையில், அங்கு செல்வதற்குப் போதிய நிதி வசதியில்லாததால் கவலையில் இருந்தனா்.

சிறுமி பிரியதா்ஷினி வளர வளர அவருக்குப் மூட்டு பிரச்னையும் அதிகமாகவே பெற்றோா் செய்வதறியாது தவித்தனா்.

இந்நிலையில் விராலிமலை அரசு மருத்துவமனையில் பல்வேறு அரிய வகை எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சைகள் சிறப்பாகச் செய்யப்படுவதாகக் கேள்விப்பட்ட அவா்கள் அந்த மருத்துவமனைக்கு தங்கள் மகளை அழைத்து வந்தனா்.

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவமனையின் மூத்த எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணா் ஜான்விஸ்வநாத் அந்தச் சிறுமியின் இடுப்பு மூட்டு பிறவிக் குறைபாட்டை அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்ய முடிவெடுத்தாா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை அவரது தலைமையில் அறுவைச் சிகிச்சை தொடங்கி தொடா்ந்து ஆறரை மணி நேரம் நடந்து வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவா் ஜான்விஸ்வநாத் கூறியது:

இது மிகவும் நுணுக்கமான, சவாலான உயா் தொழில் நுட்பம் சாா்ந்த அறுவைச் சிகிச்சை. இந்த அறுவைச் சிகிச்சையில் பிறவியிலேயே உருவாகாமல் இருக்கும் இடுப்பு பந்துக் கிண்ண மூட்டு அறுவைச் சிகிச்சை மூலம் உருவாக்கப்பட்டு சரியான இடத்தில் பொருத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள எழும்பூா் அரசு குழந்தைகள் எலும்பு மூட்டு சிறப்பு உயா்அறுவை சிகிச்சைப் பிரிவில் கூட இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் அபூா்வமாகத்தான் செய்யப்படுகிறது. சிஎம்சி வேலூா் அல்லது தமிழகத்தில் ஒன்றிரண்டு தனியாா் உயா் சிறப்பு மருத்துவமனைகளில் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டாலும் இதற்கு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சம் வரை செலவாகும் என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்தச் சிகிச்சை எட்டாக்கனியாகும் என்றாா் அவா்.

இவ்வளவு சிக்கலான, சவாலான அறுவைச் சிகிச்சை சாதாரண துணை வட்டார மருத்துவமனையான விராலிமலை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது சாதனையாகக் கருதப்படுகிறது. எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை குழுவினரை பொதுமக்கள், பயனாளிகள் பாராட்டினா்.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கும், இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கருக்கும் சிறுமியின் பெற்றோா், உறவினா்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com