உப்பூர் அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பாக  தேவையற்ற பிரச்னைகளை எழுப்ப வேண்டாம்

உப்பூர் அனல் மின் நிலையத் திட்டம் குறித்து  மீனவர்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே தேவையற்ற பிரச்னைகளை எழுப்பவேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

உப்பூர் அனல் மின் நிலையத் திட்டம் குறித்து  மீனவர்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே தேவையற்ற பிரச்னைகளை எழுப்பவேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். மீன்வளத்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்று மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் பேசினர். 
சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த  எம்.கருணாமூர்த்தி பேசியது: ராமேசுவரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில்  விதி மீறி இறால் பண்ணைகள் செயல்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும், கடல் வளத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை தடைசெய்வது அவசியம் என்றார்.
 ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் போஸ் பேசியது: ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் முதல் அனைத்து இடங்களிலும் நகராட்சி கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஆகவே கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார். சமுதாயப் பிரமுகர் சரவணன் பேசியது:  பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 250 பேரிடம் வாக்கி டாக்கி தருவதாக தலா ரூ.9,500 வசூலித்த மீன்வளத்துறை இன்னும் அவற்றை தரவில்லை என்றார். 
மோர்ப்பண்ணை துரை.பாலன் பேசியது:  உப்பூர் அனல்மின்நிலையத்தை எதிர்த்து கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றாதது சரியல்ல. 
அனல் மின் நிலையப் பணிகளை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிந்திருப்பது அச்சுறுத்துவதாக உள்ளது என்றார்.
மீனவர் ராஜதுரை பேசியது: உப்பூர் அனல்மின் நிலையம் தேவையில்லை என 2 கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இந்நிலையில், உப்பூர் அமைந்துள்ள  கடலூர் ஊராட்சியில் மக்கள் வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் மறுப்பது சரியல்ல என்றார்.
மீனவர் காளிதாஸ் பேசியது: உப்பூர் அனல் மின்நிலைய கட்டடப்பணியை தொடர்ந்து எதிர்ப்போம். அதற்காக காவல்துறையின் நடவடிக்கையை சந்திக்கவும் தயங்க மாட்டோம் என்றார்.
இக்கூட்டத்தில் மீனவர்களுக்கு பதிலளித்து ஆட்சியர்  பேசியது:  ராமேசுவரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதி மீறிய இறால் பண்ணைகளை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, மீன்வளத்துறையினர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அதனடிப்படையில் விதி மீறல் உறுதியானால் சம்பந்தப்பட்ட இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  
திருப்பாலைக்குடி பகுதியில் ஓரிரு மாதங்களில் நாட்டுப்படகு மீனவர்களுக்கான டீசல் விநியோக மையம் தொடங்கப்படும். 
ராமேசுவரம் கடல் பகுதியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நாட்டுப்படகு மீனவர்களுக்கு விரைந்து "வாக்கி டாக்கிகள்' வழங்க மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உப்பூர் அனல் மின் நிலையத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மீனவ கிராமத்தினரை அழைத்து மூன்று முறை கூட்டம் நடத்தப்பட்டது. 
அந்தக் கூட்டங்களில் அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு, கடல் பாலத்தின் உயரத்தை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய பாதிப்புகள் குறித்து மீனவர்கள் கூறிய கருத்தை ஆய்வு செய்து அரசு முடிவெடுக்கும். 
அனல்மின் நிலைய திட்டத்தை போதிய அளவுக்கு மீனவர்களிடம் விளக்கிய பிறகும், சட்டத்தை அவரவர் கையில் எடுத்து போராட்டம் நடத்துவது சரியல்ல. ஆகவே தேவையற்ற பிரச்னைகளை எழுப்ப வேண்டாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com