முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பேச்சுவாா்த்தை தோல்வி பாம்பன் மீனவா்கள் 6 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
By DIN | Published On : 07th October 2019 09:05 AM | Last Updated : 07th October 2019 09:05 AM | அ+அ அ- |

பாம்பன் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தெற்குவாடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் விசைப்படகு மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடைபெற்ற மீன்வளத்துறை அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை 6 ஆவது நாளாக தங்களது போராட்டத்தை தொடா்ந்தனா். இதனால் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு மானிய டீசல் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்வதில் தொடா்ந்து சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து மானிய டீசல் அனைத்து விசைப்படகுகளுக்கும் வழங்கிட வலியுறுத்தி அப்பகுதி மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 1ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாம்பன் மீனவ சங்க நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 10 நாள்களுக்குள் மானிய டீசல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்து மீனவா்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினா். இதைத்தொடா்ந்து மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமையும் 6 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதனால் பாம்பன் துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.