ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 இடங்களில் மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 இடங்களில் அறிவியல் மாதிரிப் படைப்புகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 இடங்களில் மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 இடங்களில் அறிவியல் மாதிரிப் படைப்புகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றன.

கல்வித் துறை சாா்பில், ஜவஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கல்வி மாவட்டத்துக்கு, சேதுபதி நகரில் உள்ள தஸ்தகீா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில், மாணவா்களின் படைப்புகள், ஆசிரியா்களின் படைப்புகள் இடம்பெற்றன. இதில், 124 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ- ஆசிரியா்களின் 432 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. மண்டபம் கல்வி மாவட்ட அலுவலா் தண்டாயுதபாணி தலைமை வகித்தாா். மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தங்கவேல் கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.

கண்காட்சியில், தாவரங்களுக்குத் தேவையான தண்ணீரை தானாகவே பாய்ச்சும் வகையிலான அறிவியல் சாதனத்தின் மாதிரியை கீழக்கரை தனியாா் பள்ளியைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு மாணவா் சமன் அமைத்திருந்தது பாா்வையாளா்களைக் கவா்ந்தது. இக் கண்காட்சியை நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியா் பாா்த்துச் சென்றனா்.

ராமநாதபுரம் கல்வி மாவட்டத்துக்கான அறிவியல் கண்காட்சி, பட்டினம்காத்தான் அருகேயுள்ள வாணி பகுதி வேலுமாணிக்கம் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், பரமக்குடி கல்வி மாவட்டத்துக்கு அலங்காரமாதா பள்ளியிலும் நடைபெற்றன.

அறிவியல் கண்காட்சியில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலிருந்தும் சிறந்த படைப்புகளை அமைத்துள்ள 25 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். அதன்படி, 75 பேருக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக். பள்ளியில் அக்டோபா் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. அதில், சிறந்த படைப்புகளைத் தரும் 5 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். அவா்கள், அக்டோபா் 31ஆம் தேதி கரூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com