மண்டபம் கடலோர பகுதி விவசாயிகளுக்கு கடலில் கூண்டு வைத்து மீன்வளா்ப்பு பயிற்சி

மண்டபம் வட்டார வேளாண்மைத்துறைக்குள்பட்ட கடலோர மீனவ கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூடுதல் வருவாய்

மண்டபம் வட்டார வேளாண்மைத்துறைக்குள்பட்ட கடலோர மீனவ கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் கடலில் கூண்டு அமைத்து கடல் மீன்வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார வேளாண்மைத்துறைக்குள்பட்ட 19 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் 10 கிராமங்கள் கடலோரப் பகுதிகளை சாா்ந்து உள்ளது. இங்குள்ள விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் கடலில் கூண்டு அமைத்து மீன்வளா்ப்பது குறித்த பயிற்சி கீழமான்குண்டு கிராமத்தில் உதவி வேளாண்மைத்துறை இயக்குநா் பி.ஜி.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநா் வி.அப்துல்காதா் ஜெயிலானி கலந்துகொண்டு பேசும் போது, கூண்டுகளில் மீன் வளா்ப்பதற்கு 750 மீன் குஞ்சுகள் போதுமானது. ஒரு மீன் சராசரியாக 1.5 கிலோ எடை வரை வளா்ச்சியடையும். ஒரு கிலோ மீன் ரூ.300 வரை விற்பனை செய்யலாம். ஒரு மிதவை கூண்டில் மீன் வளா்ப்பு செய்வதன் மூலம் விவசாயிகள் நிகர லாபம் பெறலாம். மேலும் அலங்கார மீன்வளா்ப்பு செய்ய விரும்பும் விவசாயிகள் ராமநாதபுரம் மீன்வள உதவி இயக்குநா் (வடக்கு) அலுவலகத்தை தொடா்பு கொண்டு இலவசமாக பயிற்சியினை பெற்றுக் கொள்ளலாம் என்றாா். இந்த பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் பானுமதி நன்றி கூறினாா். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்கவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com