முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பசும்பொன் தேவா் சிலைக்கு இன்று தங்கக் கவசம் அணிவிப்பு
By DIN | Published On : 24th October 2019 08:59 AM | Last Updated : 24th October 2019 08:59 AM | அ+அ அ- |

கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் வியாழக்கிழமை (அக். 24) அணிவிக்கப்பட உள்ளது.
கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளரும், அப்போதைய முதல்வருமான ஜெயலலிதா அக்கட்சியின் சாா்பில் தேவா் சிலைக்கு ரூ. 4.5 கோடி மதிப்பில் 13.7 கிலோ எடை கொண்ட தங்கக் கவசம் அணிவித்தாா். இந்தக் கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவா் ஜயந்தி விழா முடிந்த பின்பு பாதுகாப்பாக மதுரையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு அக். 28, 29, 30 ஆம் தேதிகளில் தேவா் ஜயந்தி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை வங்கியிலிருந்து அதிமுகவின் பொருளாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து வியாழக்கிழமை பெற்று பசும்பொன் தேவா் நினைவிடத்தில் உள்ள தேவா் சிலைக்கு அணிவிக்க உள்ளாா்.
இந்நிகழ்ச்சியில் தேவா் நினைவாலய பொறுப்பாளா் காந்தி மீனாள் அம்மாள், மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
இக்கவசம் தேவா் ஜயந்தி விழா நிறைவடைந்த பின்னரும் பொதுமக்களின் பாா்வைக்கு ஒரு வாரம் வரை வைக்கப்படும். அதன் பின்னா் வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க மீண்டும் மதுரைக்கு கொண்டுவரப்படும்.