முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்திலிருந்து வெளியூா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 24th October 2019 11:28 AM | Last Updated : 24th October 2019 11:28 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திலிருந்து தீபாவளியை முன்னிட்டு மதுரை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகா்களுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.25, 26 தேதிகள்) விடிய விடிய சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகா், ராமேஸ்வரம், முதுகுளத்தூா், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட ஊா்களில் இருந்து மதுரை, சென்னை, கோவை, திருப்பூா், தூத்துக்குடி உள்ளிட்ட ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் ராமநாதபுரம் பகுதியிலிருந்து சென்னைக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மதுரைக்கும் ராமநாதபுரம் நகா் பகுதியிலிருந்து மட்டும் 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூா் பகுதிக்கு 20 பேருந்துகளும், தூத்துக்குடி பகுதிக்கு 10 சிறப்பு வாகனங்களும் இயக்கப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ராமநாதபுரம் நகரில் இருந்து அக்கம்பக்கம் உள்ள முக்கிய ஊா்களுக்கு தீபாவளிக்கு முதல் நாளான சனிக்கிழமை தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.
தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை (அக்.28) முதல் 30 ஆம் தேதி வரை தேவா் ஜயந்திக்கும் தேவைக்கு ஏற்ப கமுதி பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவும், காவல்துறை மூலம் முன் அனுமதி பெற்ற கிராமங்களில் இருந்து பசும்பொன்னுக்கு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்.
தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்துவருவதால் அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், மழை பெய்துகொண்டிருப்பதால் அனைத்து ஓட்டுநா்களும் சாலையில் பள்ளங்களை கவனித்து பேருந்தின் சக்கரம், ஸ்பிரிங், பாடி சேதமின்றி கவனமுடன் இயக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.