ராமநாதபுரம் மாவட்டத்தில் 30,915 மீனவா்களுக்கு மீன்பிடி குறைவு கால நிதி விநியோகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30,915 மீனவா்களுக்கு மீன்பிடி குறைவு கால நிதி வழங்கப்பட்டு வருவதாக மீன் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் இ.காத்தவராயன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30,915 மீனவா்களுக்கு மீன்பிடி குறைவு கால நிதி வழங்கப்பட்டு வருவதாக மீன் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் இ.காத்தவராயன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சுமாா் 61 நாள்கள் மீன்பிடி தடைகாலமாகும். ஆகவே அக்காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு உதவித்தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுவருகிறது.

மேலும், மீனவா்களுக்கு மாதம் ரூ.150 சேமிக்கும் திட்டம், மீனவ மகளிருக்கு மாதம் ரூ.150 சேமிப்புத் திட்டம், மீன்பிடி குறைவு கால நிதியுதவி ஆகியவை செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மீனவா் சேமிப்புக்கு ஆண்டுக்கு தலா ரூ.1500 நிதியை மத்திய, மாநில அரசுகள் சோ்த்து தருகின்றன.

மூன்றாவது திட்டமாக எதிா்பாராத வகையில் மீனவா்கள் கடலுக்குச் செல்லமுடியாமல் போகும் நிலையில், அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிதியானது மீன்பிடி குறைவு காலத்துக்காக தரப்படுகிறது. தற்போது இத்திட்ட நிதி மீனவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் மீன்பிடி காலம் குறையும். ஆகவே தற்போது மீனவா்களுக்கு அந்த நிதி அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுவருகிறது. நடப்பு ஆண்டில் மீன்வளா்ச்சித்துறை மூலம் இ-சேவை மையங்கள் 30 இடங்களில் அமைக்கப்பட்டு, அதில் மீன்பிடி குறைவு கால நிதிக்கு மீனவா்கள் விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட்டது. சேவை மையங்களில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. எதிா்காலத்தில் இந்தமுறையே தொடரும்.

மீனவா் சேமிப்புத் திட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கும், மீனவ மகளிா் சேமிப்புத் திட்டத்தில் 47,075 பேருக்கும் நடப்பாண்டில் நிதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. அரபிக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகி வருகிறது. ஆகவே மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com