ராமநாதபுரம் நகரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 10th September 2019 08:10 AM | Last Updated : 10th September 2019 08:10 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகரில் தனிநபர் பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ளதை அகற்ற வேண்டும் எனக் கோரி, அப்பகுதியினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பட்டினம்காத்தான் ஓம்சக்தி நகர் பொதுநலச் சங்கத்தினர் ஏராளமானோர் மனு அளிக்க வந்திருந்தனர். அவர்கள் கூறியதாவது:
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பட்டினம்காத்தான் ஓம்சக்தி நகர் இரண்டாவது தெருவில் தனிநபர் பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து ஆட்சியர், வட்டாட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றக்கோரியதை ஏற்காமல், தனிநபர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றமும் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கூறியுள்ளது. இருப்பினும், அவர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
எனவே, சுமார் 500 குடும்பங்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையை ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்களுக்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்றனர். பின்னர், அவர்கள் ஆட்சியரை சந்தித்து மனுவை அளித்தனர்.
தள்ளுமுள்ளு: ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை கோரிக்கை மனுக்களை அளிக்க, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
மனு அளிக்க பதிவு செய்து காத்திருந்தவர்கள் திடீரென ஆட்சியரை நோக்கி கூட்டமாக முன்னேறினர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்தனர். அதையடுத்து, ஆட்சியர் அவர்களை வரிசையாக நிற்க வைத்து, நேரிடையாக மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், மற்றொரு வரிசையை ஏற்படுத்தி, அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி மனுக்களைப் பெற்றார்.
திங்கள்கிழமை மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் மனு அளித்ததாகவும், அவர்களுக்கு இலவச உணவு வழங்கியதாகவும், ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.