சுடச்சுட

    

    குடிமராமத்து திட்டம்: விவசாய சங்கங்களின் பெயரில் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்; பணம் பெற முடியாமல் தவிப்பு

    By நமது நிருபர்  |   Published on : 11th September 2019 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sivaganagai

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான குடிமராமத்து திட்டத்தை விவசாய சங்கங்களின் பெயரில் ஒப்பந்ததாரர்கள் செய்ததால் பணிக்கான பணத்தை பெறமுடியாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
      பொதுப்பணித்துறை கண்மாய்களை பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 5 ஆண்டுக்கு 1 முறை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு தூர்வாரி வருகிறது. இதற்கென நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தகாரர்கள் மூலம் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வந்தன. 
     இந்நிலையில் 2017 ஆம் ஆண்டிலிருந்து குடிமராமத்து பணிகளை முறையாக பதிவு செய்த விவசாய சங்கங்களின் மூலம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. 
     இந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2017-18 நிதியாண்டில் ரூ.37 லட்சம் மதிப்பில் 6 கண்மாய்களும் 2018-19 நிதியாண்டில் ரூ.1.90 கோடி மதிப்பில் 6 கண்மாய்களும் தூர்வாரப்பட்டன.  நடப்பாண்டில் கமுதியில் ரூ.4.50 கோடி மதிப்பில் கீழவலசை மலட்டாறு அணைக்கட்டு உள்பட 9 கண்மாய்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
     பொதுப்பணிதுறை கண்மாய்களில் நடைபெறும் பணிகளை, அந்தந்த நிதியாண்டில் ஆண்டு கணக்கு சமர்பிக்கும் வகையில் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விவசாய சங்கங்களின் பெயரில் அந்ததந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள், ஒப்பந்ததகாரர்களே மீண்டும் மறைமுகமாக கண்மாய் மராமத்து பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 
     கடந்த 2018-19 ஆம் ஆண்டுக்கான பணிகள் கடந்த மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படவில்லை. இதனால் அதற்கான பணம் கிடைக்காமல் ஒப்பந்தகாரர்கள் பொதுப்பணிதுறை அலுவலகத்தில் நாள்தோறும் அலைந்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பணம் ரூ. 1 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 
     விவசாயிகள் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மாவட்ட நிர்வாகத்திடமோ, மாநில தலைமை பொதுப்பணிதுறை அதிகாரிகளிடமோ நேரடியாக புகார் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் உள்ளூர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததகாரர்களுக்கும் இடையே பனி போர் நிலவி வருகிறது. 
     எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற குடிமராமத்து திட்டத்தில் விவசாய சங்கங்களின் பெயரில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததகாரர்களை கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும், ஒப்பந்ததகாரர்களுக்கு துணை போன விவசாய சங்கங்களின் மீதும் நடவடிக்கை வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
     இதுகுறித்து ஒப்பந்ததகாரர் ஒருவர் கூறியதாவது:  கடந்த 2018-19 ஆண்டு குடிமராமத்து திட்டப்பணிகள் முடிந்தும் அதற்கான பணத்தை அரசு முழுமையாக வழங்கவில்லை. இதனால் வட்டிக்கு பணம் வாங்கி அரசு பணிகளை மேற்கொண்டதால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
      இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஆண்டு கணக்கு சமர்ப்பிக்கும் மாதமான மார்ச் மாதத்திற்குள் குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டதற்கான கோப்புகளை சமர்ப்பிக்காத ஒப்பந்ததகாரர்களுக்கு நிலுவைத் தொகை குறித்து, மதுரை மண்டல பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai