ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நடப்பு ஆண்டிலாவது பருவமழை பெய்யுமா என்ற கேள்விக் குறியோடு, விவசாயத்துக்கு தயாராக முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மானாவாரி விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
திருவாடானை, அஞ்சுகோட்டை திணையத்தூர், திருவெற்றியூர் கீழ்க்குடி,தொண்டி நம்புதாளை முகிழ்த்தகம், சோழியக்குடி, தேளூர், வட்டாணம், ஆர்.எஸ்.மங்கலம், வண்டல், வரவணி, சனவேலி, அடர்ந்தனக்கோட்டை, ஏ.ஆர். மங்கலம், திருத்தேர்வலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த இடியுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது. வயல், குளம், குட்டை, கண்மாய் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 
தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவுப் பணி மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: 
தற்போது அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, ஓரியூர்,ஆர்.எஸ்.மங்கலம், செங்குடி, வண்டல்,வரவணி, ஆவரேந்தல், சனவேலி ஆகிய கிராமங்களில் விதைப்பு பணிகளும், திருவெற்றியூர், அரும்பூர், குளத்தூர், திணையத்தூர், கீழக்குடி தொண்டி நம்புதாளை முகிழ்த்தகம், கடம்பனேந்தல் போன்ற பகுதிகளில் உழவுப் பணிகளும் நடந்து வருகின்றன என்றனர். 
இப்பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
மின் தடையால் அவதி: ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் புதன்கிழமை பகலில் திடீரென மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் குளிர்ச்சியான சூழலும் நிலவியது. 
இந்தநிலையில், வியாழக்கிழமை காலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலையோரங்களில் வழக்கம் போல தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக வாகனங்கள் மெதுவாகச் சென்றதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முகூர்த்த தினம் என்பதால் மக்கள் நனைந்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.  
  மழை பெய்த நிலையில் திடீரென நகரின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மழை நின்ற பிறகு வண்டிக்காரத் தெரு 
உள்ளிட்ட பகுதிகளில் மின் அழுத்தக் குறைவால் மின் விசிறி இயங்கக்கூட முடியாத நிலை காணப்பட்டது. மின் தடையாலும், குறைந்த மின் அழுத்தக் குறைபாட்டாலும் பொதுமக்கள் அவதியடைந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com