திருவாடானை பகுதியில் கண்மாய்களில் பழுதான மடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாடானை பகுதியில் கண்மாய்களில் கழுங்கு பகுதிகள் பல கிராமங்களில் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இவற்றை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருவாடானை பகுதியில் கண்மாய்களில் கழுங்கு பகுதிகள் பல கிராமங்களில் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இவற்றை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் அதிக அளவில் பெரிய மற்றும் சிறிய பாசன கண்மாய்கள் உள்ளன.  ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக  ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த சிறிய அளவிலான மழையை கொண்டு விவசாயிகள் நேரடி  நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருவ மழையை எதிர்நோக்கி வேளாண் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியிலுள்ள பெரும்பாலான கண்மாய்களில் மடை மற்றும் கழுங்குகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் மழை காலங்களில் கண்மாய்களில் போதிய அளவில் நீரை தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியது:  தற்போது அரசு குடிமராமத்து பணிகள் மூலம் சில கண்மாய்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் பெரிய கண்மாய்களும், 200-க்கு அதிகமான சிறு பாசன கண்மாய்களும் உள்ளன. இந்நிலையில் சுமார் 10 கண்மாய்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து பணிகள் தொடங்கியுள்ளன.
ஆனால் அதிகமான கண்மாய்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாமல், மடை, கழுங்குகள் பழுது பார்க்கப்படாமல் உள்ளன. இதனால், இவற்றில் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, பல ஆண்டுகளாக பழுது நீக்கப்படாமல் உள்ள கழுங்கு, மடைகள் உள்ள கண்மாய்களை அரசு கணக்கெடுத்து அவற்றை சீரமைக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com