பரமக்குடியில் கழிவுநீர் கால்வாய்களில் கான்கிரீட் அடைப்பு: கண்டுகொள்ளாத நகராட்சி

பரமக்குடியில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் கான்கிரீட்டால் மூடி தடை ஏற்படுத்தியுள்ளதை

பரமக்குடியில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் கான்கிரீட்டால் மூடி தடை ஏற்படுத்தியுள்ளதை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
  பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் கழிவுநீர் கால்வாய் பகுதிகளில் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டுமானப் பணியின்போது ஆக்கிரமித்து கட்டி விடுகின்றனர். நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய்களை விரிவுபடுத்தாமல், குறுகிய அளவிலான வாருகாலில் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை, பெரியகடை வீதி, உழவர் சந்தை, சவுகதலி சாலை, முசாபர்கனி தெரு, சின்னக்கடைத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்ப் பகுதிகளை கான்கிரீட்டால் மூடியுள்ளனர். 
 இதனால் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் முறையாக சீரமைக்காமல், மேலோட்டமாக குப்பைகளை மட்டும் அள்ளிச் சென்றுவிடுகின்றனர். இவ்வாறு மூடி மறைக்கப்பட்ட இடங்களில் ஏற்படும் தடைகளால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியுள்ளன.  பரமக்குடி மேல முஸ்லிம் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் கழிவுநீர் செல்லாமலேயே ஆங்காங்கே தேங்கியுள்ளதாகவும், இதனால் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் பரவுவதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 
மேலும் இப்பகுதியில் வசிக்கும் பெரியவர்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கழிவுநீர் தேங்கியுள்ளதை நகராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லையாம். 
பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் நகராட்சி பகுதியில் சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதுடன், வாருகால் பகுதிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com