உப்பூரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு

உப்பூரில் பொதுமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அரசு மதுக்கடை அமைக்கக் கூடாது என அப்பகுதியினர் 

உப்பூரில் பொதுமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அரசு மதுக்கடை அமைக்கக் கூடாது என அப்பகுதியினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர். 
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் கண்மாய்க்கரையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில், அக்கடையை பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் கோவில் அருகேயுள்ள அக்ராஹரத்தெருவில் அமைக்க தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
அக்ராஹரத் தெருவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியும்,  விநாயகர் கோயிலும் உள்ளன. மேலும் அப்பகுதியில் மருத்துவமனை, பெண்கள் குளிக்கும் ஊருணியும் அமைந்துள்ளன.
மதுக்கடை அமைப்பதால் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அங்கு மதுக்கடை அமைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிடவேண்டும் என அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழுவினர் முத்துலட்சுமி மற்றும் அப்பகுதி பிரமுகர் கிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் புதன்கிழமை மனு அளிக்க வந்தனர்.  அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்துச் சென்றனர். 
பெரியபட்டினம் மக்கள் புகார்: ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பெரியபட்டினம் உள்ளது. இங்கு வாரத்தில் பெரும்பாலான நாள்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அப்பகுதிகளில் இரவு நேரங்களில் நீண்டநேரம் மின்தடை ஏற்படுவதால் திருட்டு உள்ளிட்டவை அதிகரித்துவிட்டதாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  
ரெகுநாதபுரம், பெரியபட்டினம் பகுதியில் ஏற்படும் மின்தடையை சீர்படுத்தக்கோரி அப்பகுதியினர் பெரியபட்டினம் மேம்பாட்டு அறக்கட்டளை முகம்மதுபசீர்ஓசாயி தலைமையில் ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com