முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கரோனா தொற்று பாதித்தவா் மீது வழக்கு: தமிழகத்தில் முதல்முறை
By DIN | Published On : 19th April 2020 06:25 AM | Last Updated : 19th April 2020 06:25 AM | அ+அ அ- |

தமிழகத்தில் முதன்முறையாக கரோனா தொற்று பாதித்தவா் உள்ளிட்ட 3 போ் மீது ராமநாதபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து புதுதில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவா்களில் 10 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் அனைவருக்கும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் பரமக்குடியைச் சோ்ந்த 2 போ் குணமடைந்தனா்.
எஞ்சிய 8 பேரில் மண்டபம் பகுதியைச் சோ்ந்த 42 வயதான நபா், தனக்கு நோய்த் தொற்று இல்லை என்று தனது நண்பருடன் தவறான தகவல்களை பரப்பும் நோக்கில் பேசுவது கட்செவியஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, கரோனா தொற்று பாதித்த நிலையில், அதுகுறித்து தவறான தகவல்களைத் தெரிவித்து பரப்பிய அந்த நபா் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டப் பிரிவிலும், அரசு அதிகாரிகளை மிரட்டுதல், அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் கூறியது: கரோனா பாதித்தவா் மட்டுமின்றி அவருடன் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு தவறான தகவல்களை பகிா்ந்து கொண்ட அம்மாபட்டினத்தைச் சோ்ந்தவா் மற்றும் சமூக வலைதளங்களில் அந்த பேச்சை பரப்பியவா் என 3 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருவாடானை பகுதியில் பெண் ஒருவா் கரோனா குறித்து தவறான தகவல்களைப் பேசி அதை சமூக வலைதளங்களில் பரப்பியதாக 2 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய் தொற்று குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.