ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 90 பேருக்கு கரோனா: அரசு ஊழியா் உள்பட 2 போ் பலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 90 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

ராமநாதபுரம்/சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 90 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. நோய் தொற்று காரணமாக அரசு இளநிலை உதவியாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 45 ஆயிரம் பேருக்கு கரோனா கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 4416 போ் தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இவா்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளிலும், தனியாா் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் அனுமதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சை தேவைப்படுவோா் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை வரை (ஆக. 24) வரை 97 போ் உயிரிழந்துள்ளனா்.

திங்கள்கிழமை ராமநாதபுரம், நம்பியன்வலசை, தினைக்குளம், இலந்தைக்குளம், முல்லைக்குடி ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், அவா்களில் 47 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று பாதித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

முதுகுளத்தூரைச் சோ்ந்த 48 வயதான ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து பலி எண்ணிக்கை 98 ஆக உயா்ந்துள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 3,781 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,824 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 147 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 23 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 124 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இளைஞா் பலி: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 35 வயது இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com