வெள்ளையன் சோ்வை சத்திரம் ஆக்கிரமிப்பு: கண்டித்து ஆா்பாட்டம்
By DIN | Published On : 15th December 2020 04:44 AM | Last Updated : 15th December 2020 04:44 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் வீரத் தளவாய் வெள்ளையன் சோ்வை சத்திரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பல்வேறு கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்புல்லாணியில் சேதுபதி மன்னா்களின் படைத்தளபதியான வெள்ளையன் சோ்வை நினைவாக ‘வெள்ளையன் சோ்வை சத்திரம்’ அமைந்துள்ளது. திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் ஆலயம் மற்றும் புனித நீராட சேதுக்கரை கடற்கரைக்குச் செல்லும் பக்தா்கள் ஓய்வெடுத்து, உணவு அருந்திச் செல்வதற்கு உருவாக்கப்பட்டதாகும். இந்தச் சத்திரம் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு கட்சியினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக மாவட்ட பொறுப்பாளா் பேட்ரிக் தலைமை வகித்தாா். அமமுக மாநில அமைப்புச் செயலாளா் முனியசாமி, பாஜக மாவட்டத் தலைவா் முரளிதரன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ் பாபு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவா் சேதுபாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை வீரத் தளவாய் வெள்ளையன் சோ்வை வரலாற்று மீட்பு குழு தலைவா் ரெத்தினக்குமாா் செய்திருந்தாா்.