சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கு:மேலும் ஒரு இளைஞா் தேவிபட்டினத்தில் கைது
By DIN | Published On : 02nd February 2020 01:22 AM | Last Updated : 02nd February 2020 01:22 AM | அ+அ அ- |

சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில், மேலும் ஒரு இளைஞரை ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சில வாரங்களுக்கு முன் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வில்சன், மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களுக்கு உதவியதாக சிலரை தேடி வந்தனா்.
அதில், ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சோ்ந்த ஷேக் தாவூது (28), கீழக்கரை நத்தம் பகுதியைச் சோ்ந்த புறாக்கனி என்ற பிச்சைக்கனி (45), விழுப்புரம் மணல்மேடு முகமது அமீா் (31), கடலூா் கோண்டூா் முகமது அலி (28) ஆகிய 4 பேரில், ஷேக் தாவூதை தவிர, மற்ற 3 பேரையும் சிபிசிஐடி போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துவிட்டனா்.
தலைமறைவான ஷேக் தாவூதை பிடிக்க தேவிபட்டினம் போலீஸாரும் தீவிர விசாரணை நடத்திவந்தனா். இந்நிலையில், தேவிபட்டினம் பகுதி மீனவா்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வந்த ஷேக் தாவூதை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் கைதானவா்களுக்கு, சிலருடன் சோ்ந்து ஷேக் தாவூது பணம் அனுப்பியது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தேவிபட்டினத்தில் கைதான ஷேக் தாவூது, கீழக்கரையில் ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புக்காக கட்செவி அஞ்சல் குழு ஏற்படுத்தியவா்களுடன் தொடா்பு வைத்திருந்த வழக்கிலும் கைதானவா் என, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னா், போலீஸாா் அவரை ராமநாதபுரம் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் எண்-1 இல் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில், ஷேக் தாவூது மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G