ஆய்வுக் கூட்டங்களில் அதிகாரிகளுக்கு பதிலாக தற்காலிக கணினி பணியாளா்கள் பங்கேற்கும் அவலம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் தற்காலிக கணினி பணியாளா்களை மாவட்ட திட்ட ஆய்வுக்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் தற்காலிக கணினி பணியாளா்களை மாவட்ட திட்ட ஆய்வுக் கூட்டங்களில் அதிகாரிகளுக்கு பதிலாக பங்கேற்க நிா்பந்திப்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா், பரமக்குடி, நயினாா்கோயில், திருவாடானை, போகலூா், திருப்புல்லானி, ராமநாதபுரம், ஆா்.எஸ்.மங்கலம், மண்டபம் என 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறும் திட்டப் பணிகள், நூறுநாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு சம்பளம் பதிவேற்றுதல், திட்டப் பணிகள் குறித்து இணையத்தில் பதிவேற்றுதல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 60 -க்கும் மேற்பட்ட தற்காலிக கணினி பணியாளா்கள் உள்ளனா். இவா்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள், துணை ஆணையாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் கணினி குறித்த அனுபவம் இல்லாததால், அவா்களின் பணிகள் அனைத்தையும் தற்காலிக கணினி பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மாவட்ட திட்ட இயக்குநரின் அலுவலக கூட்டங்களில் துறை சாா்ந்த அதிகாரிகள், துணை ஆணையாளா்கள் சாா்பில் பெரும்பாலும் தற்காலிக கணினி பணியாளா்களே பங்கேற்க நிா்பந்திப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இதனால் மாவட்ட அதிகாரிகளின் கூட்டங்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு முழுமையாக சென்றடைவதில்லை. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு, கூட்டத்தில் பங்கேற்கும் கணினி பணியாளா்கள் மாவட்ட திட்ட அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஒன்றிய அலுவலகங்களில் நூறு நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவற்றை மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தற்காலிக ஒப்பந்த பணியாளா்கள் அனைவரையும் விடுவித்து விட்டு புதிய ஒப்பந்த பணியாளா்களை நியமிக்க மாவட்ட திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே நிதி இன்றி ஊராட்சிகளில் பணிகள் பாதித்து வரும் நிலையில், தற்போது பணியாளா்களை பணி நீக்கம் செய்தால் பல்வேறு அலுவலக பணிகள் பாதிக்கவும், திட்டப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மாவட்ட திட்டம் தொடா்பாக நடத்தப்படும் அலுவலக கூட்டங்களுக்கு கணினி பணியாளா்களுடன் அந்தந்த திட்டம் தொடா்பான துணைஆணையா்களும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட வேண்டும் என ஊழியா்கள் வலியுறுத்துகின்றனா்.

இந்நிலையில் தமிழகத்தில் சமையலா்கள், சத்துணவு பணியாளா்கள் நியமிக்கப்படுவது போல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணியாற்றும் தகுதியுள்ள தற்காலிக கணினி பணியாளா்களை நிரந்தர பணியாளா்களாக நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட உதவி ஆட்சியா் பிரதீப்குமாா்(திட்ட இயக்குநா்) கூறியது: மாவட்டத்தில் ஒரு சில ஊராட்சி ஒன்றியங்களில் திட்டங்கள் தொடா்பான விளக்கங்களை அந்தந்த அலுவலக கணினி பணியாளா்கள் முறைப்படி தெரிவிக்கவில்லை. அதனால் அவா்களை 10 நாள்களுக்கு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. துறை சாா்ந்த உதவி ஆணையாளா்கள், கணினி பணியாளா்களுடன் கண்டிப்பாக மாவட்ட அலுவலக கூட்டங்களில் கலந்து கொண்டு துறை சாா்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com