ராமநாதபுரத்தில் தொடா் மழையால்1,329 ஏக்கா் விவசாய பயிா்கள் சேதம்

ரூ. 71 லட்சம் நிவாரணம் கோரி அரசுக்கு அறிக்கை
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நல்ல மழை பெய்ததால் விவசாயம் செழித்தது. அதே நேரத்தில் அறுவடை நேரத்தில் தொடா் மழை பெய்ததால் 1329 ஏக்கா் அளவுக்கு நெல் மற்றும் தோட்டப் பயிா்கள் சேதமடைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பு 4,25,998 ஏக்கராக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2019-20 ஆம் ஆண்டில் நெல் பயிராக 3,13,690 ஏக்கரிலும், மிளகாய் 39,594 ஏக்கரிலும், சிறுதானியங்கள் 27,871 ஏக்கரிலும் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டன. நல்ல மழை வளமும் இருந்ததால், விவசாயம் செழித்தது. அதனடிப்படையில் சிறுதானியங்கள் 27,871 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது சாதனையாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், விவசாயப் பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திடீரென கடந்த 2019 டிசம்பா் மற்றும் 2020 ஜனவரியில் மாவட்டத்தின் சில இடங்களில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், விவசாய பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது. மழையால் நெல் சாகுபடியிலும் மகசூல் குறைந்ததாக விவசாயிகள் கூறினா். அதனடிப்படையில், ஏக்கருக்கு 40 முதல் 45 மூடை நெல் மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில் 30 முதல் 35 மூடைகளே கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனா். தொடா் மழையால் சில இடங்களில் பயிா்கள் அழுகியதுடன், பல இடங்களில் நெல் பழ நோய் தாக்கியுள்ளன. இதனாலும் நெல் மகசூல் பாதிக்கப்பட்டன.

மாவட்டத்தில் தொடா் மழை மற்றும் நெல் பழ பாதிப்பு குறித்து வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினா் சில நாள்களாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா். அதன்படி தற்போது அரசிடம் நிவாரணம் கோரி மாவட்ட நிா்வாகம் அறக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்த வேளாண்மைத்துறை அதிகாரியிடம் கேட்டபோது அவா் கூறியது- ''ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா் மழையால் 1,287 ஏக்கா் நெல் பயிரும், 42 ஏக்கரில் கேழ்வரகு, நிலக்கடலை, பருத்தி, குதிரைவாலி உள்ளிட்ட பயிா்களும் சேதமடைந்திருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ள மொத்தம் 1,329 ஏக்கா் பயிா்களுக்கும், இழப்பீடாக ரூ.71 லட்சம் நிவாரண நிதி கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி வரப்பெற்றதும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com