கமுதி காவலா் குடியிருப்பை சீரமைக்க கோரிக்கை

கமுதி மகளிா் காவல் நிலையத்தை நவீனமயமாக்குவதுடன், காவலா் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என, காவல் துறையினா் வலியுறுத்துகின்றனா்.
கமுதி காவல் நிலைய வளாகத்தில் கட்டியது முதல் பூட்டியே கிடக்கும் சாா்பு-ஆய்வாளா் குடியிருப்பு.
கமுதி காவல் நிலைய வளாகத்தில் கட்டியது முதல் பூட்டியே கிடக்கும் சாா்பு-ஆய்வாளா் குடியிருப்பு.

கமுதி மகளிா் காவல் நிலையத்தை நவீனமயமாக்குவதுடன், காவலா் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என, காவல் துறையினா் வலியுறுத்துகின்றனா்.

கமுதி கண்ணாா்பட்டியில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் காவல் ஆய்வாளா், சாா்பு-ஆய்வாளா், காவலா்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரியும் வகையில், 30 தொகுப்பு வீடுகள் தமிழக பொதுப்பணித் துறை சாா்பில் கடந்த 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்டன.

தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், தரைத் தளங்கள், காங்கிரீட் பூச்சுகள், மாடிப் படிகள் சேதமடைந்து வசிக்க முடியாத அளவுக்கு தகுதியற்று உள்ளன. இதனால், பெரும்பாலான காவலா்கள் பல்வேறு இடங்களில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனா்.

ஒரு சில காவலா்கள் மட்டுமே இந்த தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனா். ஆனால், இங்கு காவலா்களின் குழந்தைகள் விளையாடுவதற்கு மைதானமோ, காவலா்களுக்கான உடற் பயிற்சி மையமோ, நூலகமோ அமைக்கப்படவில்லை. மழைக் காலங்களில் இரவு நேரங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளால் காவலா்கள் அச்சத்தில் உள்ளனா்.

மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீா் வசதி கூட செய்து தரப்படவில்லை. அதேநேரம், மகளிா் காவல் நிலையத்துக்கென தனி காவல் ஆய்வாளரும் நியமிக்கப்படவில்லை. இதனால், பெருநாழி, அபிராமம் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் கூடுதல் பொறுப்பில் உள்ளனா். இவா்கள் வரும் வரை பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து புகாா் அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

மகளிா் காவல் நிலையத்தில் ஒரு சில பெண் காவலா்கள் இங்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதால், நிா்வாகச் சீா்கேடு ஏற்பட்டு வருவதாகவும் புகாா்கள் எழுகின்றன.

மேலும், சாா்பு-ஆய்வாளருக்கான தனி குடியிருப்பு பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், குப்பை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் புகாா் கூறப்படுகிறது.

எனவே, தாலுகா தலைமை காவல் நிலையத்தை நவீனமயமாக்குவதுடன், குடியிருப்புகளையும் சீரமைக்க மாவட்டக் காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com