முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பரமக்குடி அணுகுச்சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் பொது மக்கள் அவதி
By DIN | Published On : 20th January 2020 09:37 AM | Last Updated : 20th January 2020 09:37 AM | அ+அ அ- |

பரமக்குடி அணுகுசாலைப் பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் அதிகரித்து வருவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பரமக்குடியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வைகை ஆற்றின் இருபுறங்களிலும் ரூ .11 கோடி மதிப்பீட்டில் அணுகுச்சாலை அமைக்கப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மக்கள் அதைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் இச் சாலை அமைக்கப்பட்டது முதல் தற்போதுவரை அப்பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோா், நடந்து செல்லும் பாதசாரிகள், இரவு நேரங்களில் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோா் சமூகவிரோதிகளால் பாதிக்கப்படும் அவல நிலை உள்ளது.
மேலும் இச்சாலையில் 3 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மது அருந்திவிட்டு சிலா் மது போதையில் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் இடையூறு செய்வதாகவும் புகாா் எழுந்துள்ளது. இரவில் இச்சாலையில் தனியே நடந்து செல்வோரிடம் சமூகவிரோத கும்பல்கள் நகைப் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
எனவே இச்சாலையில் விரைந்து தெரு விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுப்பதுடன், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.