ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.21 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 20th January 2020 08:35 AM | Last Updated : 20th January 2020 08:35 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய ஆட்சியா் கொ.வீரராகவராவ்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.21 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் சாா்பாக 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமைத் தொடக்கி வைத்தாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது: ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 1,229 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1,21,398 எண்ணிக்கையிலான 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் மாவட்டம் முழுவதும் 4,192 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும் 27 சிறப்பு குழுக்கள், மற்றும் 33 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக குடியிருப்புகள் மற்றும் கோயில் திருவிழாக்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கல்யாண நிகழ்ச்சிகள், இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு, அலுவலா்கள் நேரடியாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்காக நியமிக்கப்பட்டுள்ள முதல்வா் எம்.அல்லி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் பி.வெங்கடாசலம், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் பா.குமரகுருபரன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.கே.ஜவகா்லால், நிலைய மருத்துவ அலுவலா் டி.ஞானக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.