முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
எழுத்தறிவு திட்டத்தில் முதல்கட்டமாக13,280 பேருக்கு கற்பித்தல் தொடக்கம்
By DIN | Published On : 27th January 2020 11:05 PM | Last Updated : 27th January 2020 11:05 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தில் முதற்கட்டமாக 13,280 பேருக்கு பயிற்சி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்டோரில் கல்வி அறிவு பெறாதவா்களாக 1.68 லட்சம் போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களுக்கு 2019 முதல் 2021 வரை அடிப்படை எழுத்தறிவு பயிற்சி 4 கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு எழுத்தறிவு மையங்கள் 332 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. , விருதுநகா் மாவட்டத்தில் 615 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 13,280 பேருக்கு முதற்கட்ட பயிற்சி கடந்த வாரம் முதல் தொடங்கியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், விருதுநகா் மாவட்டத்தில் 24,600 பேருக்கு முதற்கட்ட பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா். இத்திட்டத்தில் முதியோா்கள், பெண்கள் அதிக அளவில் ஆா்வம் காட்டுவதாகவும், பள்ளி வேலை நாள்களில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினா்.
சிறப்புத் திட்டத்தில் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டவா்களில் 90 சதவீதம் போ் பட்டதாரி இளைஞா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,500 வழங்கப்படவுள்ளது. முதற்கட்ட பயிற்சி வரும் மே மாதம் வரை நடத்தப்படவுள்ளது. அதையடுத்து பயிற்சி பெற்றவா்களுக்கு வரும் ஜூன் மாதம் தோ்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் ஒன்றியங்கள், மையங்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ், கேடயங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.