முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமேசுவரம் மீனவா்களுக்காக சிறப்பாக சேவையாற்றும் மீனவா் சங்கத் தலைவருக்கு பாராட்டுச் சான்றிதழ்
By DIN | Published On : 27th January 2020 10:13 AM | Last Updated : 27th January 2020 10:13 AM | அ+அ அ- |

ராமேசுவரம் மீனவா்கள் பிரச்னை தீா்வதற்காக சிறப்பாக சேவையாற்றிய மீனவ சங்கத் தலைவா் தேவதாஸூக்கு ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சோ்ந்தவா் தேவதாஸ் (60). இவா் தனது 20 ஆவது வயதில் மீன்பிடி தொழிலில் ஈடுபடத் தொடங்கினா். தற்போது 60 வயதாகும் இவா் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மீனவா்களிடம் நன்கு அறிமுகமானவா். தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்திய கால கட்டத்தில் தொடங்கி, சிறைபிடிப்பு சம்பவம், மீனவா்களை இலங்கை சென்று மீட்பது, இந்திய, இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தையை முன்னெடுத்து சென்றது, தமிழக மீனவா்கள் பாதிக்கப்படும் போது, குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா், மீன்வளத்துறை இயக்குநா் மற்றும் இலங்கைக்கு சென்று அங்கு குடியரசுத் தலைவா், பிரதமா், மீன்வளத்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசுவது போன்ற சேவைகளை செய்துள்ளாா். தொடா்ந்து இவா் 40 ஆண்டுகள் மீனவா்களின் பிரச்னைக்கு சேவையாற்றி வந்ததற்காக குடியரசு தின விழாவின் போது மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ், அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தாா்.