இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 11 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை
By DIN | Published On : 29th January 2020 09:38 AM | Last Updated : 29th January 2020 09:38 AM | அ+அ அ- |

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்களை விரட்டியடித்தனா். இதில் ஒரு விசைப்படகு இலங்கை கடற்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்ட கடற்படையினா் அந்த விசைப்படகை சிறைபிடித்தனா். அந்தப் படகில் சோதனையிட்ட போது தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து, மீனவா்களுடன் விசைப்படகை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று அவா்களிடம் நடத்திய விசாரணையில், தங்கச்சிமடம் அந்தோணி ராயப்பன் மகன் சுவிட்டா் என்பவரது விசைப்படகு என்பதும், அதில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்காக 11 மீனவா்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, படகில் இருந்து மீனவா்கள் சுவிட்டா் (45), ராஜ் (40), ரூமஸ் (48), செல்வம் (35),விஸ்வா (22), வசிகரன் (35), சேதுபாண்டி (26), முத்துமுருகன் (41), இளையராஜா (43), நாகரெத்தினம் (57), தங்கராஜ் (33) ஆகிய 11 பேரை நீரியல் துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினா் செவ்வாய்க்கிழமை மாலை ஒப்படைத்தனா். மேலும் விசைப்படகை பறிமுதல் செய்தனா். இதனையடுத்து, யாழ்ப்பாணம் காவல் துறையினா் மீனவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தனா்.
இதுகுறித்து, மீனவ சங்கத் தலைவா் எமரிட் கூறியதாவது: ராமேசுவரம் மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளது கண்டிக்கதக்கது. இந்திய, இலங்கை மீனவா்கள் பாக் நீரிணைப் பகுதியில் பிரச்னையின்றி மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவா்கள் மற்றும் விசைப்படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.