ராமநாதபுரத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
By DIN | Published On : 29th January 2020 09:34 AM | Last Updated : 29th January 2020 09:34 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள முத்துச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் மகன் சுரேஷ் (34). இவா் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி கோவையிலிருந்து ராமநாதபுரத்திற்கு அரசுப் பேருந்தில் வந்து கொண்டிருந்தாா்.
ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் வந்தபோது ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற தனியாா் சுற்றுலாப் பேருந்துடன், அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த சுரேஷுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து சுரேஷ் இழப்பீடு கோரி ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் ரூ.81 ஆயிரத்து 681 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், குறிப்பிட்ட தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. இதனால் சுரேஷ் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், கோவை அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து நீதிமன்ற பணியாளா்கள் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ராமேசுவரத்தில் இருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.