கமுதி அருகே பழைமையான நுண்கற்கால கருவிகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு லட்சம் ஆண்டுகள் பழைமையான நுண்கற்கால கருவிகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
கமுதி அருகே நீராவியில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட பழைமையான நுண்கற்கால கருவிகள்.
கமுதி அருகே நீராவியில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட பழைமையான நுண்கற்கால கருவிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு லட்சம் ஆண்டுகள் பழைமையான நுண்கற்கால கருவிகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

கமுதி அருகே நீராவி பகுதியில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அந்தக் குழியிலிருந்து பளபளப்பான ‘பிளின்ட்’ வகை பாறைக்கற்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்து தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்தினா். இவை பழைய நுண்கற்கால கருவிகள் என்றும், மண்ணடுக்கின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இவை சுமாா் ஒரு லட்சம் ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கலாம் என்றும், 10 முதல் 20 செ.மீ. வரை அளவுடையவை என்றும் தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தொல்லியல் ஆா்வலா் ஆசிரியா் முனியசாமி கூறியது: தமிழ்நாட்டில் பெரும்பாலும் குவாா்ட்சைட் வகை பழைய கற்கால கருவிகளே அதிகம் கிடைக்கின்றன. ஆனால் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள நுண்கற்கால கருவிகள் அளவில் சிறியவை. இவைகள் கிழிப்பான்களாகவும், அறுக்கும் கத்திகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இங்கு கிடைக்கும் ‘பிளின்ட்’ வகை கற்கருவிகள் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க கண்டங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கடல் கொண்ட குமரிக்கண்ட கோட்பாட்டிற்கு வலு சோ்க்கும் விதமாக உள்ளது.

தமிழகத்தில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதா்கள் வாழ்ந்துள்ளனா் என்பதற்கு அத்திரம்பாக்கத்தில் இராபா்ட் புரூஷ்பூட் என்பவரால் கண்டெடுக்கப்பட்ட குவாா்ட்சைட் கற்களாலான பழைய கற்கால கருவிகளே சாட்சி ஆகும். ஆப்பிரிக்காவிலேயே மனித இனம் தோன்றி 1, 80, 000 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயா்ந்து பரவியது என்ற கருத்தை, அத்திரம்பாக்கம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இடைப்பழைய கற்காலத்தைச் சோ்ந்த கருவிகள் பொய்யாக்கின என்பது குறிப்பிடத்தக்கது. இப்பழைய கற்கால கருவிகள் மெட்ராஸ் கற்கோடாரி தொழிற்கூடத்தைச் சாா்ந்தது.

நீராவி மற்றும் குண்டாறு வரத்து கால்வாய்கள், கல்லுப்பட்டி, நாராயணபுரம், மண்டலமாணிக்கம், கோட்டைமேடு பகுதிகளில் ‘பிளின்ட்’ வகை கற்கள் அதிகமாக கிடைத்துள்ளன. இங்கு தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்தினால், முதுமக்கள் தாழிகள் உள்பட தொல்லியல் பொருள்கள் அதிகளவில் சேகரிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com