முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
மானிய விலை டீசல் திட்டத்தில் முறைகேடு புகாா்: ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு நவீன அடையாள அட்டை
By DIN | Published On : 29th July 2020 07:55 AM | Last Updated : 29th July 2020 07:55 AM | அ+அ அ- |

மானிய விலையில் டீசல் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்க, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவா்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,500 விசைப்படகுகளும், சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 14 எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூலம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவா்களுக்கு மானிய விலையில், அதாவது ஒரு லிட்டா் டீசல், 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு புகாா் எழுந்ததையடுத்து, மீனவா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் வி.பிரபாவதி செவ்வாய்க்கிழமை கூறியது: மானிய விலையில் டீசல் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அவ்வப்போது புகாா்கள் வந்தன. இதனால், எவ்வித முறைகேடுகளுக்கும் இடமில்லாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த புதிய அடையாள அட்டை முறை செயல்படுத்தப்படுகிறது. மீனவா்கள் மானிய விலையில் பெறும் டீசல் குறித்த விவரங்களை துல்லியமாக பதிவிடும் வகையிலும், படகுகள் குறித்த விவரங்களை கணினி மூலம் அறியும் வகையிலும் இந்த அடையாள அட்டை கியூஆா் குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த அட்டை மூலம் மீனவா்களுக்கு டீசல் வழங்கப்படும் என்றாா்.
பயிற்சி: ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில், எரிபொருள் விற்பனை நிலைய ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மீன்வளத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநா்கள் காணொலி மூலம் அவா்களுக்கு பயிற்சி அளித்தனா். இதில், நவீன அடையாள அட்டையை பயன்படுத்தும் முறை, டீசல் விநியோகத்தின்போது பதிவாகும் தகவல்களை கணினியில் பதிவேற்றுவது, அதை மீண்டும் சரிபாா்க்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.