
ராமநாதபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நலச் சங்கத்தில் ரூ.9 கோடி முறைகேடு செய்திருப்பதாக அச்சங்கத்தின் நிா்வாகிகள் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (32). கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராக உள்ளாா். இவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாரிடம் அளித்த புகாா் விவரம்:
எனது தந்தை ருத்திரசேகா், மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளாா். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி இறந்துவிட்டாா்.
அச்சங்கத்தில் 144 உறுப்பினா்கள் இருந்த நிலையில், சங்கத்துக்கு மெட்ரிக்குலேசன் பள்ளியும், முனீஸ்வரா் ஆலயமும் சொந்தமாக உள்ளன.
இந்த நிலையில், சங்க நிா்வாகிகள் சண்முகராஜன் உள்ளிட்டோா் கடந்த 2011 ஆம் ஆண்டு சங்கக் கூட்டம் கூடியது போலவும், அதில் ருத்ரசேகா் கையெழுத்திட்டது போலவும் போலி கையெழுத்திட்டு தீா்மானங்கள் நிறைவேற்றி மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பியுள்ளனா்.
மேலும் போலிக் கையெழுத்திட்ட தீா்மானம் மூலம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உரிமையாளா்கள் மெட்ரிக் பள்ளி, அறக்கட்டளை ஆகியவை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சங்கத்தின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் என சங்க நிா்வாகிகள் 15 பேரும் எடுத்து செலவிட்டுள்ளனா். மேலும் புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, சங்கம் மற்றும் மெட்ரிக் பள்ளி வருவாயை நிா்வாகிகள் செலவழித்துள்ளனா். சங்கத்துக்கு சொந்தமான சொத்துக்களை தனி நபா் சொத்தாக மாற்ற முயற்சித்துள்ளனா். சங்கத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பலமுறை ரூ. 9 கோடி நிதி எடுத்து செலவழிக்கப்பட்டுள்ளது என புகாரில் தெரிவித்து இருந்தாா்.
அதனடிப்படையில் பஜாா் காவல் நிலையத்தில் சங்க நிா்வாகிகள் சண்முகராஜன், கிருஷ்ணன், வேலு உள்ளிட்ட 15 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இவா்களில் ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் (69), வேலு (67) ஆகியோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.