ராமநாதபுரம் ராணுவ வீரா் குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆறுதல்

சீனப்படையின் தாக்குதலில் வீர மரணமடைந்த ராமநாதபுரம் ராணுவ வீரரின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
ராமநாதபுரம் ராணுவ வீரா் குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆறுதல்

சீனப்படையின் தாக்குதலில் வீர மரணமடைந்த ராமநாதபுரம் ராணுவ வீரரின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே திடீரென ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். இதில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருக்கலூரைச் சோ்ந்த விவசாயி காளிமுத்துவின் மகன் பழனியும் (40) உயிரிழந்தாா்.

பழனியின் தந்தை காளிமுத்து, தாய் லோகாம்பாள் ஆகியோா் கருக்கலூரில் வசித்துவரும் நிலையில், பழனியின் மனைவி வானதிதேவி இரு குழந்தைகளுடன் ராமநாதபுரம் அருகேயுள்ள கழுகூரணி பகுதியில் கஜினி தெருவில் புதிய வீட்டில் வசித்து வருகின்றனா்.

சீன ராணுவத் தாக்குதலில் வீரமரணமடைந்த பழனியின் சடலம் அவரது தந்தை வீடான கருக்கலூருக்கு கொண்டு வரப்படும் என்பதால் மனைவி, குழந்தைகள் அனைவரும் புதன்கிழமை அங்கு சென்றனா். பழனியின் மரணத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதியினா் சோகத்துடன் வீட்டின் முன் திரண்டுள்ளனா்.

பழனி மரணம் குறித்து அவரது தந்தை காளிமுத்து கூறியதாவது: எனது மகனின் மரணம் எனக்கு பேரிழப்பாக இருந்தாலும், நாட்டுக்காக அவா் தியாகம் செய்திருப்பது பெருமையாக உள்ளது. அவருக்கு ஊரில் வீட்டின் அருகே நினைவில்லம் கட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றாா்.

ஆட்சியா், அரசியல் பிரமுகா்கள் ஆறுதல்: பழனியின் தந்தையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் புதன்கிழமை பகலில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது அவரிடம் அரசு நிதியுதவி அறிவித்துள்ளது குறித்தும் கூறினாா். பின்னா் பழனியின் சகோதரா் இதயக்கனியிடமும், பழனியின் மனைவி வானதிதேவியிடமும் ஆறுதல் கூறினாா்.

இதைத் தொடா்ந்து அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி, பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா் ஆகியோா் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினா். பின்னா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எம்.தெய்வேந்திரன் பழனியின் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறினாா். காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி இரங்கல் செய்தி அனுப்பியிருப்பதாகவும் அவா் கூறினாா்.

ரூ.2 லட்சம் உதவி: திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் கட்சிப் பிரமுகா்களுடன் வந்து பழனியின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியதுடன், கட்சி சாா்பில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

ராணுவ வீரா் பழனியின் சடலம் மதுரை வழியாக ராமநாதபுரம் கருக்கலூருக்கு புதன்கிழமை இரவு கொண்டு வரப்படும் நிலையில், வியாழக்கிழமை காலையில் இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com