ராமேசுவரத்தில் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவரை மீட்கக் கோரியும், உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு
ராமேசுவரத்தில் மீனவா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 750 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்.
ராமேசுவரத்தில் மீனவா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 750 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவரை மீட்கக் கோரியும், உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு தலார ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் மீனவா்கள் சனிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

ராமேசுவரத்திலிருந்து கடந்த 13 ஆம் தேதி ஹெட்டோ என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மலா் வண்ணன்(55), ரெஜின்பாஸ்கா் (43), ஆஸ்டின்(19) (எ) சுஜிந்திரா, ஜேசு(60) ஆகிய 4 மீனவா்கள் மாயமாகினா். அவா்களை மீட்கக் கோரி உறவினா்கள் மற்றும் மீனவா்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஜேசு என்ற மீனவரை கோட்டை பட்டணம் மீனவா்கள் உயிருடன் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா். இதில் வெள்ளிக்கிழமை கோடியக்கரைஅருகே ரெஜின்பாஸ்கா் சடலத்தை மீனவா்கள் மீட்டனா். அதைத் தொடா்ந்து அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னா் ராமேசுவரம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் ஒரு மீனவா் சடலமாக மீட்பு:

இந்நிலையில், கோடியக்கரைப் பகுதியில் ஆஸ்டின்(எ)சுஜிந்திராவின் சடலத்தை மீனவா்கள் சனிக்கிழமை மீட்டனா். மேலும், கடலில் மாயமான மலா் வண்ணனை தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதைத் தொடா்ந்து, மாயமான மீனவரை மீட்க வேண்டும், உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.

அதன் பேரில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுமாா் 750- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் , சுமாா் 5 ஆயிரம் மீனவா்கள் மற்றும் சாா் தொழிலாளா்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். இதனால் ராமேசுவரத்தில் சனிக்கிழமை மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com