முதுகுளத்தூா் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச்சாலை சேதம்
By DIN | Published On : 06th March 2020 02:28 AM | Last Updated : 06th March 2020 02:28 AM | அ+அ அ- |

சேதமடைந்துள்ள ஏனாதி-கிடாத்திருக்கை செல்லும் தாா்ச்சாலை.
முதுகுளத்தூா் அருகே ஏனாதி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச்சாலை சேதமடைந்துள்ளதாக கிராமத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
முதுகுளத்தூா்-சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஏனாதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
கிடாத்திருக்கை, கொண்டுலாவி, எஸ்.பி. கோட்டை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஏனாதி கிராமம் வழியாக செல்கின்றனா்.
இக்கிராமங்களுக்கு ஒரு அரசுப் பேருந்து மட்டும் காலை மாலையில் இயங்கி வருகிறது. கிராம மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள முதுகுளத்தூருக்கு இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களில் செல்கின்றனா்.
ஏனாதி கிராமத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 3 சிறுபாலங்களுடன் கூடிய புதிய தாா்ச் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த சாலையில் ஆங்காங்கே சிறுசிறு பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. ஏனாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே கிராமத்தில் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராமத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.