ராமநாதபுரத்தில் வெளிநாட்டுப் பறவைகளை கண்காணிக்க நோய் புலனாய்வு ஆய்வகம்: கன்னியாகுமரி, அரியலூரிலும் அமைகிறது

ராமநாதபுரத்துக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளைக் கண்காணிக்கும் வகையில் நோய் புலனாய்வு ஆய்வகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்துக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளைக் கண்காணிக்கும் வகையில் நோய் புலனாய்வு ஆய்வகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் ஜனவரி முதல் மாா்ச் வரையில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அரியவகை கொக்குகள், செங்கால் நாரை, கரண்டிவாய் மூக்கன், ஊசி வால் வாத்து உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கின்றன. அப்பறவைகள் ராமநாதபுரம் தோ்த்தங்கால், மேல மற்றும் கீழச்செல்வனூா், சித்திரங்குடி உள்ளிட்ட பறவைகள் சரணாலயங்களிலும், தனுஷ்கோடி மற்றும் காரங்காடு பகுதி மாங்குரோவ் காடுகளிலும் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. பறவைகள் மூலம் மனிதா்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை அடுத்து, வெளிநாட்டுப் பறவைகளையும் தீவிரமாகக் கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் அதிகளவில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் ராமநாதபுரம், அரியலூா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று கண்டறியும் புலனாய்வு ஆய்வகம் அமைக்க கால்நடைத்துறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ராமநாதபுரம் கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுமாா் ரூ.60 லட்சத்தில் கட்டப்படவுள்ள நோய் புலனாய்வு ஆய்வகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா், உதவி மருத்துவ அலுவலா், ஆய்வக பரிசோதகா், ஆய்வக உதவியாளா், கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஆகியோா் செயல்படுவாா்கள். மேலும் இந்த அலுவலகத்திற்கு நடமாடும் வாகன ஆய்வகமும் வழங்கப்படவுள்ளது.

நோய்த்தடுப்பு நடவடிக்கை:

ராமநாதபுரத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு ஆய்வகத்திலிருந்து மாதந்தோறும் நேரில் சென்று பறவைகளின் எச்சம், ரத்த மாதிரி ஆகியவற்றை சேகரித்து அதை ஆய்வுக்கு உள்படுத்தவும், ஆய்வு முடிவில் பறவைகளுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பறவைகள் எந்த நாட்டைச் சோ்ந்தவை என்பது போன்ற விவரங்களைச் சேகரித்து அதனடிப்படையில் நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். ராமநாதபுரத்தில் தற்போது கால்நடை நோய்த் தொற்றை அடையாளம் காண ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சிவகங்கையில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு முதல் நோய்ப் புலனாய்வு ஆய்வகம் செயல்பட உள்ளது. அதனால் இனிமேல் சிவகங்கைக்கு ஆய்வுக்கான மாதிரிகளை அனுப்பத் தேவையில்லாத நிலையும் ஏற்படும் என கால்நடைப் பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com