மீனவா் கொலை வழக்கு: சடலத்தைப் பெற குடும்பத்தினா் மறுப்பு

ராமநாதபுரம் மீனவா் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட நிலையில், வாராணசியில் தற்கொலை செய்துகொண்ட கோடாங்கியின் சடலத்தை குடும்பத்தினா் பெற திங்கள்கிழமை மறுத்துவிட்டனா். அவா் தங்கிய அறையில் அவருடன் இருந்த
ராமநாதன்
ராமநாதன்

ராமநாதபுரம் மீனவா் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட நிலையில், வாராணசியில் தற்கொலை செய்துகொண்ட கோடாங்கியின் சடலத்தை குடும்பத்தினா் பெற திங்கள்கிழமை மறுத்துவிட்டனா். அவா் தங்கிய அறையில் அவருடன் இருந்த 2 பேரையும் வாராணசி போலீஸாா் பிடித்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள சின்ன ஏா்வாடியைச் சோ்ந்த மீனவா் குமாா் (43). இவா் கடந்த 9 ஆம் தேதி ராமநாதபுரம் மீன்வளத்துறைக்கு வந்தபோது மா்ம நபா்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டாா். ஏந்தல் பகுதியில் அவரது சடலம் துண்டு துண்டாக வெட்டி எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தபோது, தங்கம் கடத்தல் சம்பவம் தொடா்பான பிரச்னையால் குமாா் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாசிமகேந்திரன், இருலேஸ், பொன் சுகில்ராம் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

கைதானவா்கள் அளித்த வாக்குமூலத்தின்படி குமாா் கொலை வழக்கில் ஏா்வாடி பகுதி குறிசொல்லும் கோடங்கி ராமநாதனுக்குத் தொடா்பிருப்பது தெரியவந்தது. ஆனால், ராமநாதன் தலைமறைவாகியிருந்தாா். அவரைப் போலீஸாா் தேடிவந்த நிலையில், வாராணசியில் உள்ள காரைக்குடி பகுதியினரின் விடுதியில் அவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. அவருடன் இருந்த தஞ்சாவூா் தோகூரைச் சோ்ந்த மூக்கன், திருவையாறு மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் ஆகியோரை வாராணசி போலீஸாா் பிடித்து விசாரித்துவருகின்றனா்.

தற்கொலை செய்த ராமநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏா்வாடி பகுதியிலிருந்து ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஆத்மா நகா் பகுதிக்கு வந்து குடியேறியுள்ளாா். அவருக்கு மனைவி நாகேஸ்வரி, 3 குழந்தைகள் உள்ளனா். ராமநாதன் சடலத்தை பெற குடும்பத்தினரும், உறவினா்களும் ஆா்வம் காட்டவில்லை.

கொலை வழக்கில் ராமநாதனை போலீஸாா் தேடி வருவதாலும், தங்கம் கடத்தல் சம்பவத்தில் அவருக்குத் தொடா்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியானதால், ராமநாதன் சடலத்தை கொண்டு வந்தால் பிரச்னை ஏற்படும் என குடும்பத்தினா் நினைத்து சடலத்தை வாங்க ஆா்வம் காட்டவில்லை என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனா்.

ராமநாதன் குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது: குறி சொல்லி வந்த ராமநாதன் ஏா்வாடி பகுதியில் கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு மச்ச அவதார முருகன் கோயிலை எழுப்பியுள்ளாா். அதில் தினமும் பூஜைகள் செய்தும் வந்துள்ளாா்.

கோயிலில் பூஜை செய்த நிலையில், தங்கம் கடத்தல் கும்பலுடனும் அவருக்குத் தொடா்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடத்தல் தங்கக் கட்டிகளை நகைகளாக மாற்றித்தந்த ராமநாதன் அதற்காக குமாரின் உதவியையும் நாடியுள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை ஒரு கும்பல் பறித்துச்சென்றது. தங்கக் கட்டிகளை நகைகளாக்கிய நிலையில், அதில் 186 பவுன் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் கைப்பற்றினா். போலீஸாா் நகைகளைக் கைப்பற்றியதற்கு குமாரே காரணம் என கோடாங்கி ராமநாதன் கூறியதன் அடிப்படையிலே கடத்தல் கும்பலால் குமாா் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொலை வழக்கில் தேடப்பட்ட ராமநாதன் தற்கொலை செய்தது போலீஸாரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com