ராமநாதபுரத்தில் கரோனா பீதியிலும் சட்டவிரோத மது விற்பனை
By DIN | Published On : 25th March 2020 05:24 AM | Last Updated : 25th March 2020 05:24 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரானோ வைரஸ் பீதியிலும் கூட விதி மீறி மது விற்றதாக 14 இடங்களில் இருந்து திங்கள்கிழமை மட்டும் 1,041 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் விதிமீறி மது பாட்டில்கள் விற்பவா்களை கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் உத்தரவிட்டுள்ளாா். மக்கள் அனைவரும் கரானோ வைரஸ் பரவல் குறித்த பீதியில் இருக்கும் நிலையில், மது விற்பனை மட்டும் குறைந்தபாடில்லை என ஆதங்கத்துடன் பொதுமக்கள் கூறுகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் திருப்புல்லாணி, கமுதி, பேரையூா், பரமக்குடி, சாயல்குடி, ராமேசுவரம் பகுதிகளில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 14 இடங்களில் சட்டவிரோத மது விற்பனை நடந்துள்ளது. பெட்டிக்கடைகள், பொது இடங்களில் மறைவான பகுதிகள் என நடந்த மது விற்பனையின் போது அந்தந்த பகுதி காவல்துறையினா் சோதனை நடத்தி பிடித்துள்ளனா்.
அதனடிப்படையில் அதிகபட்சமாக சாயல்குடி கடுகுசந்தையில் 336 மது பாட்டில்கள் பிடிபட்டுள்ளன. ராமேசுவரம் ஜெட்டி பகுதியில் 43 பாட்டில்களும், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கியிருந்த மதுபாட்டில்கள் சிக்கின.