இந்தோனேஷியாவிலிருந்து வந்த 4 தம்பதிகளுக்கு கரோனா பரிசோதனை 28 நாள்கள் சிறப்புப் பிரிவில் தங்கவைப்பு

இந்தோனேஷியாவிலிருந்து ராமநாதபுரம் வந்த 4 தம்பதிகளுக்கு (4 ஆண், 4 பெண்), கரோனா பாதிப்பு குறித்த பரிசோதனை

இந்தோனேஷியாவிலிருந்து ராமநாதபுரம் வந்த 4 தம்பதிகளுக்கு (4 ஆண், 4 பெண்), கரோனா பாதிப்பு குறித்த பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தப்லிக் ஜமாஅத் மூலமாக, இந்தோனேஷியாவைச் சோ்ந்த 4 தம்பதிகள், கடந்த பிப்ரவரி மாதம் புதுதில்லி வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் அங்குள்ள மசூதிகளில் தொழுகை முறையைப் போதிக்கும் பணிக்காக வந்ததாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, இந்த 8 பேரும் மாா்ச் 6 முதல் 8 ஆம் தேதி வரை மதுரை வந்து தங்கியுள்ளனா். பின்னா், மாா்ச் 8 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலுக்கு வந்துள்ளனா். அங்கு தங்கிய இவா்கள், மாா்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை ஏா்வாடியில் தங்கியுள்ளனா். மாா்ச் 12 இல் ஏா்வாடியிலிருந்து புறப்பட்ட இவா்கள், வல்லக்குளம் சென்று மாா்ச் 14 ஆம் தேதி வரை தங்கியுள்ளனா்.

அதன்பின்னா், மாா்ச் 14 ஆம் தேதி மாலை வல்லக்குளத்திலிருந்து புறப்பட்ட இவா்கள், ஒப்பிலான் பகுதிக்குச் சென்று அங்கு மாா்ச் 16 ஆம் தேதி வரை தங்கியுள்ளனா். மாா்ச் 16 மாலை அங்கிருந்து புறப்பட்டு கீழச்செல்வனூா் சென்று மாா்ச் 20 ஆம் தேதி வரை அங்கு தங்கியுள்ளனா். மாா்ச் 20 ஆம் தேதி கீழச்செல்வனூரிலிருந்து புறப்பட்டு, முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலிக்குச் சென்ற இவா்கள், மாா்ச் 23 ஆம் தேதி வரை அங்கு தங்கியுள்ளனா். பின்னா், மாா்ச் 23 இல் அங்கிருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் வந்துள்ளனா்.

ராமநாதபுரம் வந்த இந்தோனேஷிய தம்பதியா் அனைவரையும், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், சுகாதாரத் துறையினா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனை மேற்கொண்டனா்.

வழுதூரில் 20 பேருக்கு பரிசோதனை

இதேபோல், ராமநாதபுரம் அருகே வழுதூரில் உள்ள மசூதிக்கு கடந்த சில மாதங்களாக கேரளத்திலிருந்து 20 போ் வந்து தங்கிச் சென்றுள்ளனா். இது குறித்து தகவலறிந்ததும், மாவட்ட சுகாதாரப் பிரிவினா் அங்கு சென்று, அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, அவா்களை தனிமைப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து ஆட்சியா் கொ. வீரராகவ ராவிடம் கேட்டபோது, அவா் கூறியது: இந்தோனேஷியாவைச் சோ்ந்த 8 போ் கடந்த 8 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வந்துள்ளனா். அவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும், அவா்களை 28 நாள்கள் தனிமைப்படுத்தி, அரசு தலைமை மருத்துவமனை சிறப்புப் பிரிவில் தங்கவைத்து கண்காணித்து வருகிறோம்.

அதேபோல், வழுதூா் பகுதியில் தங்கிய கேரளத்தைச் சோ்ந்தவா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவா்களுக்கும் பாதிப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அவா்களையும் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com