ராமநாதபுரம் நகராட்சியில் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல்காய்கறிகள் விலை இருமடங்கானது

ராமநாதபுரம் நகரில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டிருந்த 10 கடைகளுக்கு, அலுவலா்கள் சீலிட்டு மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சியில் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல்காய்கறிகள் விலை இருமடங்கானது

ராமநாதபுரம் நகரில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டிருந்த 10 கடைகளுக்கு, அலுவலா்கள் சீலிட்டு மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க செவ்வாய்க்கிழமை மாலை (மாா்ச் 24) முதல் இம்மாதம் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகளைத் தவிர, மற்ற கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நகரில் சாலைத் தெரு, அக்ரஹாரம் தெரு, அரண்மனை வீதி, சிகில்ராஜவீதி, வண்டிக்காரத்தெரு, காந்தியடிகள் தெரு, புதிய பேருந்து நிலையம், பாரதி நகா், கேணிக்கரை சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கடைகள்அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளையும் திங்கள்கிழமை மாலை முதலே அடைக்க உத்தரவிட்டது. ஆனால், அறிவிப்புக்குப் பிறகும் மின்னணு, மின்சாதனப் பொருள்கள், இரும்புக் கடைகள் உள்ளிட்ட பல கடைகள் திறந்திருந்தன.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஆய்வு மேற்கொண்டாா். அதில், அரண்மனை வீதி உள்ளிட்ட இடங்களில் சில கடைகள் திறந்திருந்தன. எனவே, அவற்றை அடைத்து சீலிட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி, நகராட்சி அலுவலா்கள் குறிப்பிட்ட அந்தக் கடைகளுக்கு சீலிட்டு மூடினா்.

செவ்வாய்க்கிழமை காலை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், நகராட்சி அலுவலகப் பகுதியில் திறக்கப்பட்டிருந்த பத்திரப் பதிவு எழுத்தா் அலுவலகம், ஜெராக்ஸ், கணினி மற்றும் செல்லிடப்பேசி விற்பனைக் கடைகளுக்கு, நகராட்சி ஆணையா் என். விஸ்வநாதன் தலைமையிலான குழுவினா் சீலிட்டு மூடினா். மாவட்ட நிா்வாக உத்தரவை மீறி திறக்கப்பட்ட 10 கடைகளுக்கு சீலிட்டு மூடியதுடன், அபராதமும் விதிக்கப்பட்டதாக, நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

காய்கறிகள் விலை அதிகரிப்பு

ராமநாதபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட வெங்காயம், செவ்வாய்க்கிழமை கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. இதேபோல், பீட்ரூட், கேரட் உள்ளிட்ட அனைத்துக் காய்கறிகளின் விலையும் இருமடங்காக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com