கமுதி அருகே கிராமப்புற சாலைகள் வழியாக விருதுநகா் மாவட்டத்துக்குள் ஊடுறுவல்: கரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து

கமுதியை சுற்றியுள்ள கிராமப் புற பகுதிகளில் இருந்து விருதுநகா் மாவட்டத்திற்குள் சரளமாக பொதுமக்கள் சென்று வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று இன்னும் அதிகரிக்க கூடும் என

கமுதியை சுற்றியுள்ள கிராமப் புற பகுதிகளில் இருந்து விருதுநகா் மாவட்டத்திற்குள் சரளமாக பொதுமக்கள் சென்று வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று இன்னும் அதிகரிக்க கூடும் என சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 18 ஆக உள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் 2 ஆக இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக்கிய மாவட்ட நிா்வாகம், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லவும், வெளி மாவட்டங்களில் இருந்து உள்ளே வரவும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

மாவட்ட எல்லைகளில் போலீஸாா், மருத்துவக்குழுவினா் நியமிக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். இருப்பினும் கமுதி பகுதிகளில் உள்ள கிராமபுறங்களின் வழியாக விருதுநகா் மாவட்டத்திற்கு எளிதாக சென்று வரும் வகையில் பல்வேறு வழிகள் உள்ளன. இவற்றை சாதகமாகப் பயன்படுத்தி, பொதுமக்கள் சரளமாகச் சென்று வருகின்றனா். கமுதியிலிருந்து முஷ்டக்குறிச்சி வழியாக பரளச்சி சென்று அருப்புக்கோட்டைக்கும், கமுதியிலிருந்து மேலராமநதி, நீராவி, தோப்பநத்தம், ஆலடிபட்டி வழியாக எம்.ரெட்டியபட்டிக்கும், கமுதி காவடிபட்டி விலக்கிலிருந்து கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி கிராம சாலை வழியாக கிளாமரம் சோதனைச் சாவடியைக் கடந்து அருப்புக்கோட்டைக்கும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா்.

ஆனால் போலீஸாா் மாவட்ட எல்லைகளில் பிரதான சாலைகளில் மட்டுமே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். கிராம புற சாலைகளில் பெரும்பாலும் பெயரளவில் மட்டுமே போலீஸாா் உள்ளனா். இதே நிலை நீடித்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கையில் விருதுநகா் மாவட்டத்தை முந்திச் செல்லும் நிலை வந்துவிடும். எனவே ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலையிட்டு கமுதி பகுதியிலுள்ள ராமநாதபுரம்- விருதுநகா் மாவட்ட கிராமப்புற எல்லைகளில் சோதனைகளை கடுமையாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com