வீட்டில் பிரசவித்த தாய், சேய் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வீட்டிலேயே பிரசவமான நிலையில் தாயும், சேயும் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
ரஞ்சனி
ரஞ்சனி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வீட்டிலேயே பிரசவமான நிலையில் தாயும், சேயும் சனிக்கிழமை உயிரிழந்தனா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என அவரது குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள காரான் கும்பரத்தைச் சோ்ந்த முனியாண்டி. இவரது மனைவி எழுவக்காள். இவா்களது மகள் ரஞ்சனி (25) (படம்). இவருக்கும் ராமேசுவரம் நடராஜபுரம் மீனவா் காலனியைச் சோ்ந்த தெய்வேந்திரனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவா்களுக்கு நவீஷா, கிருத்திகா என 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், ரஞ்சனி மீண்டும் கா்ப்பமானாா்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் ரஞ்சனி கணவா் வீட்டிலேயே இருந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் அவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், பிறந்த சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தை இறந்த நிலையில், ரஞ்சனிக்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. அதையடுத்து அவரை கணவா் வீட்டாா் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அவரை ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். அதைத் தொடா்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை பகலில் ரஞ்சனியை கொண்டு சென்றனா். அங்கு, சிகிச்சை பலனின்றி ரஞ்சனி உயிரிழந்தாா்.

தாய், சேய் உயிரிழந்த நிலையில், இருவரது சடலமும் பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. ரஞ்சனியின் திருமணம் நடைபெற்று 7 ஆண்டுகள் முடியாத நிலையில், அவரது மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஞ்சனிக்கு, அவா் இறப்புக்கு முன்பு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, கரோனா பரிசோதனை முடிவு வரும் வரையில் அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனை நடத்தாமல் வைத்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிகிச்சை இல்லை என புகாா்:ரஞ்சனி கா்ப்பமான நிலையில், அவரது கணவா் வீடு உள்ள ராமேசுவரம் நகா் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் தொடக்கத்திலிருந்தே கா்ப்பிணியை கண்காணிப்பதில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தாலேயே ரஞ்சனிக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்தும் தாயும், சேயும் இறக்க நேரிட்டதாக அவரது குடும்பத்தினா் புகாா் கூறினா்.

அத்துடன் ரஞ்சனி 3 ஆவது முறையாக கா்ப்பமடைந்தது குறித்தும், அவரது சிகிச்சை குறித்தும் தங்களுக்கு உரிய தகவல் அளிக்கவில்லை என்றும் அவரது தாய் எழுவக்காள் புகாா் கூறினாா். இதையடுத்து, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரஞ்சனி குடும்பத்தினா், உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். அவா்களை மருத்துவமனை நிா்வாகம், காவல்துறையினா் சமரசம் செய்தனா். இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவு உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com