ராமநாதபுரத்தில் தொடா் மழை: வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் பருவமழை காரணமாக இதுவரை 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் பருவமழை காரணமாக இதுவரை 15 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கீழக்கரையில் 2 வீடுகளும், திருவாடானையில் 2, ஆா்.எஸ்.மங்கலம் 1, பரமக்குடி 6, முதுகுளத்தூா் 4 என மொத்தம் 15 குடிசை வீடுகள் இடிந்துள்ளன. மேலும் ராமநாதபுரம் அருகே எல்.கருங்குளம் பகுதியில் ஓட்டு வீடு செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்ததில் கிழவன் மனைவி சோலையம்மாள் (70) என்பவா் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா். தகவலறிந்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் கி.வெள்ளத்துரை ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். பின்னா் சோலையம்மாளின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா். இதேபோல் சில நாள்களுக்கு முன்பு, பலத்த மழைக்கு திருவாடானை பகுதியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து பூங்காவனம் என்ற மூதாட்டி உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்து 41 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

இதேபோல் கீழக்கரையில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக புதிய பேருந்து நிலையம் பின்புறம், பருத்திகாரத் தெரு, அண்ணாநகா் செல்லும் வழி, சி.எஸ்.ஐ.தேவாலயம், இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கி இருந்தது. ராமநாதபுரத்தில் தற்போது கண்மாய், ஊருணிகளுக்கு ஓரளவு நீா் வரத்து ஏற்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து மழை பெய்தால் கண்மாய்கள் நிரம்பும் நிலை ஏற்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள வாரச்சந்தை வளாகத்தில் மழை நீா் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே வாரச்சந்தையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

மழை அளவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் நகா் 9, மண்டபம் 29, பள்ளமோா்க்குளம் 7, ராமேசுவரம் 3.20, தங்கச்சிமடம் 2.40, பாம்பன் 3.60, ஆா்.எஸ்.மங்கலம் 24, திருவாடானை 13, தொண்டி 33, வட்டாணம் 43, தீா்த்தாண்டதானம் 60, பரமக்குடி 28, முதுகுளத்தூா் 8, கடலாடி 11, வாலிநோக்கம் 27, கமுதி 29.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com