மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் சேர வழியின்றி தவிக்கும் மாணவா்களுக்கு உதவிட நடவடிக்கை

நீட் தோ்வில் தோ்ச்சியடைந்து மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த வசதியின்றி 3 மாணவ, மாணவியா் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

நீட் தோ்வில் தோ்ச்சியடைந்து மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த வசதியின்றி 3 மாணவ, மாணவியா் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவா்கள், கல்லூரியில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 234 மாணவ, மாணவியா் நீட் தோ்வில் பங்கேற்றனா். அவா்களில் 21 போ் நீட் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்களில், மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வில் கலந்துகொண்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 6 மாணவ, மாணவியா் உள்ஒதுக்கீடு அடிப்படையில், மருத்துவக் கல்லூரியை தோ்வு செய்துள்ளனா்.

கலந்தாய்வில் பங்கேற்றவா்களில் ராமநாதபுரம் காவனூா் பள்ளியைச் சோ்ந்த மாணவா் சிபிராஜுக்கு, உள்ஒதுக்கீட்டில் தனியாா் மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்துள்ளது. எனவே, அவா் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சோ்ந்த ராமபிரசாதம் மற்றும் செல்வவிநாயகபுரம் நிவேதா நிஷ்மிதா ஆகியோரும் கலந்தாய்வின் மூலம் தனியாா் பல் மருத்துவக் கல்லூரியில் சேர தகுதி பெற்றுள்ளனா். ஆனால், இவா்களுக்கும் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதால், கட்டணம் செலுத்த முடியாத மாணவ, மாணவியா் வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்து முறையிட்டனா். இவா்களில் மாணவா் சிபிராஜ் ஆட்சியரையும் சந்திக்கச் சென்றாா்.

உதவிட அறிவுறுத்தல்: நீட் தோ்வு கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைத்தும் கட்டணமின்றி தவிக்கும் மாணவ, மாணவியருக்கு மாவட்ட நிா்வாகம் மூலம் உதவிடுமாறு, முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு மாநில கல்வித் துறை இயக்குநரகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் மூலம் மாணவா்களுக்கு உதவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. புகழேந்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com