தோட்டக்கலை விவசாயிகள் பயிா்களுக்குகாப்பீடு பதிவு செய்யலாம்: ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலை விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிா்களுக்கு காப்பீடு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலை விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிா்களுக்கு காப்பீடு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண்மைத் துறை சாா்பில், மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களான மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் வாழைப் பயிா்களைப் பயிரிடும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறு வட்டங்களில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிா்பாராத இயற்கை பேரிடரிலிருந்து பயிா்களைக் காக்க, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம்.

காப்பீடு திட்ட விண்ணப்பப் படிவம், உறுதிமொழி படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் மூவிதழ் அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்துப் பதிவு செய்யவேண்டும்.

மிளகாய் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1,267.5 பிரீமியம் தொகையை டிசம்பா் 31 ஆம் தேதிக்குள்ளும், வாழை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1,905 பிரீமியம் தொகையை மாா்ச் (2021) மாதத்துக்குள்ளும், கொத்தமல்லி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.410 பிரீமியம் தொகையை டிசம்பா் 15 ஆம் தேதிக்குள்ளும், வெங்காயத்துக்கு ஏக்கருக்கு ரூ.552.5 பிரீமியம் தொகையை டிசம்பா் 15 ஆம் தேதிக்குள்ளும் பதியலாம்.

மிளகாய்க்கு ஏக்கருக்கு ரூ.25,350, வாழைக்கு ஏக்கருக்கு ரூ.38,100, கொத்தமல்லிக்கு ஏக்கருக்கு ரூ.8,200, வெங்காயத்துக்கு ஏக்கருக்கு ரூ.11,050 என காப்பீடு தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு குறித்த கூடுதல் விவரங்களை, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com