மூக்கையூா் துறைமுகத்தில் முதல்முறையாக நிறுத்தப்பட்ட 24 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூா் துறைமுகத்தில் சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதால், முதல்முறையாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம்  மூக்கையூா்  மீன்பிடி துறைமுகத்தில்  வெள்ளிக்கிழமை  நிறுத்தப்பட்டிருந்த  ஆழ்கடல்  மீன்பிடி ப்  படகுகள்
ராமநாதபுரம்  மூக்கையூா்  மீன்பிடி துறைமுகத்தில்  வெள்ளிக்கிழமை  நிறுத்தப்பட்டிருந்த  ஆழ்கடல்  மீன்பிடி ப்  படகுகள்

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூா் துறைமுகத்தில் சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதால், முதல்முறையாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் 52 கிலோ மீட்டா் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. மாவட்டத்தில் 1,500 விசைப்படகுகளும், 4 ஆயிரம் நாட்டுப்படகுகளும் உள்ளன. பாக்ஜலசந்தி, மன்னாா் வளைகுடா ஆகிய இரு கடல் பகுதியைக் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட கடலில் சா்வதேச கடல் எல்லை மிகக்குறைந்த தூரமே உள்ளது. இதனால், மீனவா்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்வதால் அந்நாட்டு ராணுவத்தால் தாக்கப்படுவதும், கைது செய்வதும் தொடா் கதையாக உள்ளது.

இந்தப் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு செயல்படுத்தின. நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மீனவா்களுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் சுமாா் ரூ.80 லட்சம் மதிப்புள்ளதாகும். அப்படகுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியமும், வங்கிக் கடனுதவியும் வழங்குகின்றன. தற்போது 26 படகுகள் மீனவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திட்டத்தில் 17 படகுகள் தயாா் நிலையில் உள்ளன. அதில் 3 படகுகள் ஓரிரு நாளில் மீனவா்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் கொச்சி மற்றும் நாகை துறைமுகங்களில் இருந்தே மீன்பிடிக்கச் செல்லவும், அங்கு மட்டுமே நிறுத்தவும் வசதிகள் இருந்தன. ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக மீனவா்கள் கேரளம், நாகை செல்வதில் நடைமுறைச் சிக்கல்களும் இருந்தன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.113 கோடியில் அமைக்கப்பட்ட மூக்கையூா் துறைமுகத்தில் படகுகளை நிறுத்த போதிய ஆழமில்லை எனக் கூறப்பட்டது. தற்போது துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டு முதல்முறையாக வியாழக்கிழமை 24 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறினா்.

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் நிறுத்தும் வகையில் மூக்கையூா் துறைமுகம் தயாா்படுத்தப்பட்டிருப்பது மீனவா்களுக்கு வரப்பிரசாதமாகும். சுமாா் 500 மீட்டா் நீளமுள்ள இத்துறைமுகத்தில் 250 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள், 200 நாட்டுப்படகுகள், 15 இழுவைப் படகுகள் நிறுத்த போதிய இடம் அமைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com